மும்பை: வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.25% உயர்த்தி உள்ளதால் வீடு, வாகனம், தனிநபர் கடன் வட்டி உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் பணவீக்கம் உயர்ந்து ரூபாய் மதிப்பும் சரிந்து வருகிறது. இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டம் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் மும்பையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகியகால கடன் மீதான (ரெப்போ) வட்டி விகிதத்தை 5.25-லிருந்து 5.5 சதவீதமாக உயர்த்த ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. கடைசியாக கடந்த 2023-ம் ஆண்டு வட்டி உயர்த்தப்பட்டது. மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு வட்டி உயர்த்தப்பட்டுள்ளது.
இக்கூட்டத்துக்குப் பிறகு ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறும்போது, ‘‘ரெப்போ விகிதத்தை 0.25% உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வர்த்தக நிச்சயமற்ற தன்மை தொடர்ந்து நீடிக்கிறது. உலகளாவிய சூழல் பலவீனமாகவே உள்ளது. போரின் தாக்கமும் வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலிகளை சீர்குலைக்கக்கூடும்.
இருப்பினும், இந்தியப் பொருளாதாரம் வலுவாக இருக்கிறது. நடப்பு நிதியாண்டில் நம் நாட்டின் பணவீக்கம் 4.4 ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது” என்றார். இந்த வட்டி உயர்வு காரணமாக, வீடு, வாகனம், தனிநபர் கடன்கள் மீதான வட்டி விகிதத்தை வங்கிகள் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.