வணிகம்

மீண்டும் ‘ஜியோ பிரைம்’ அறிமுகம்: பயனர்களுக்கான சலுகைகள் என்னென்ன?

ரீசார்ஜ் கட்டணத்தில் மாற்றமில்லை என உத்தரவாதம்

வேட்டையன்

மும்பை: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய டெலிகாம் துறையில் அறிமுகமான பத்தாம் ஆண்டை முன்னிட்டு மீண்டும் ‘ஜியோ பிரைம்’-ஐ அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பயனர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் என்ன என்பதை பார்ப்போம்.

கடந்த 2015-ல் இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் நிறுவனத்தின் பீட்டா சோதனை பயன்பாட்டுக்கு வந்தது. 2016-ல் நாடு முழுவதும் பயன்பாட்டுக்கு அறிமுகமானது. அது முதல் இந்திய டெலிகாம் துறையில் புதிய பாய்ச்சலை ஜியோ ஏற்படுத்தியது. தற்போது சுமார் 500 மில்லியன் பயனர்கள் ஜியோ டெலிகாம் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்திய டெலிகாம் துறையில் இப்போது ஏற்பட்டுள்ள மாற்றத்தை ஜியோ வரவுக்கு முன், வரவுக்கு பின் என வகைப்படுத்த முடியும். அந்த அளவுக்கு சந்தையில், பயனர்கள், போட்டியாளர்கள் என அனைவரிடத்திலும் ஜியோ நிறுவனம் மாற்றத்தை ஏற்படுத்தியது.

பயனர்களை ஈர்க்க சிம் கார்டை இலவச பயன்பாட்டுக்கு வழங்கியது. அதன் பின்னர் ‘ஜியோ பிரைம்’ என்ற கட்டண சந்தா திட்டத்தை ஜியோ அறிமுகம் செய்தது. ரூ.99-ல் பயனர்களுக்கு சில சலுகைகளை அந்நிறுவனம் வழங்கியது. இதன் மூலம் பல்வேறு ஜியோ சேவைகளை கட்டணமின்றி பயனர்கள் பெற்றனர்.

மீண்டும் ‘ஜியோ பிரைம்’ அறிமுகம்

இந்நிலையில், இந்திய டெலிகாம் சந்தையில் நுழைந்து 10 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் மீண்டும் ‘ஜியோ பிரைம்’ சந்தாவை பயனர்களுக்காக கொண்டு வந்துள்ளது ரிலையன்ஸ் ஜியோ. இம்முறை இதன் கட்டணம் ரூ.300 என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் சலுகைகள் என்னென்ன?

>> ஜியோ உட்பட பல்வேறு டெலிகாம் நிறுவனங்கள் தங்களது ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்துவது வழக்கம். இந்நிலையில், ஜியோ பிரைம் சந்தாவை பெறுகின்ற பயனர்களுக்கு செப்டம்பர் 5, 2027 வரையில் தற்போது கிடைக்கின்ற ரீசார்ஜ் கட்டணத்திலேயே அதை பெற முடியும் என்ற உத்தரவாதத்தை ஜியோ அளித்துள்ளது.

>> அதன்படி இந்த காலகட்டத்தில் ரீசார்ஜ் கட்டணம் உயர்ந்தாலும் பழைய கட்டணத்தில் பிரைம் பயனர்கள் அதை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

>> இதோடு கேஷ் பேக் ஆஃபராக ரூ.600 அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.300 சிம் கார்டு வவுச்சராகவும், ரூ.300 ஜியோ ஹோம் / ஜியோ பிசி இணைப்புக்கான வவுச்சர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

>> ஜியோவின் தயாரிப்பு, சேவை மற்றும் டிரையல்களை ஜியோ பிரைம் சந்தாதாரர்கள் பெற முடியும்.

>> ஜியோ பிரைம் சந்தாதாரர்களுக்கு சேவையில் முன்னுரிமை வழங்க பிரத்யேக சேனல்.

SCROLL FOR NEXT