புதுடெல்லி: ரிலையன்ஸ் அனில் அம்பானி நிறுவனத்திற்குச் சொந்தமான ரூ.1,021 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இதன்மூலம், இதுவரை முடக்கப்பட்ட சொத்துகளின் அளவு ரூ. 20,367 கோடி ஆக உயர்ந்துள்ளது.
அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் கமர்ஷியல் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனங்கள் பொதுமக்களிடம் மற்றும் வங்கிகளிடம் இருந்து பெறப்பட்ட நிதியை தவறாக பயன்படுத்தி மோசடி செய்ததாக பல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை அமலாக்கத்துறை விசாரித்து அந்நிறுவனத்திற்குச் சொந்தமான சொத்துகளை முடக்கி வருகிறது. அதன்படி, தற்போது ரூ.1,021 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியுள்ளது.
இதுகுறித்து அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் கேபிடல் ஃபைனான்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் மூலம், பொதுமக்களிடம் இருந்து ரூ.15,548 கோடி நிதி திரட்டப்பட்டது. இவ்வாறு திரட்டப்பட்ட பொது நிதியானது, ரிலையன்ஸ் அனில் அம்பானி குழுமத்தின் முழுக் கட்டுப்பாட்டிலும், மேலாண்மையிலும் இயங்கி வந்த போலி நிறுவனங்கள் மற்றும் அதன் குழும நிறுவனங்கள் மூலமாகத் திட்டமிட்டு மோசடி செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக தற்போது மேலும் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட சொத்துகளில் ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் பங்குகளும் அடங்கும். இந்த பங்குகளை ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் தன் வசம் வைத்திருந்தது. இவை தவிர, சாசன் பவர் மற்றும் ரிலையன்ஸ் பவர் ஆகிய நிறுவனங்களிடமிருந்து வர வேண்டிய கடன் தொகை தொடர்பான சொத்துகளும் அடங்கும். பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்தச் சொத்துகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது.
இதுவரை, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் நான்கு அமலாக்க வழக்குகளும், அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் கீழ் மூன்று வழக்குகளும் இந்த நிறுவனத்திற்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கின் விசாரணைக்காக 80-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், ரிலையன்ஸ் அனில் அம்பானி குழுமத்தின் மீதான வழக்குகளில் இதுவரை முடக்கப்பட்ட மொத்த சொத்துகளின் மதிப்பு ரூ.20,367 கோடியாக உயர்ந்துள்ளது.
மேலும், அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ரூ.77.86 கோடி மதிப்பிலான சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த 8 உயர் அதிகாரிகள் மற்றும் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் இதுவரை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.