புதுடெல்லி: இந்தியாவின் ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளை சந்தை (ஆர்இஐடி) 10.8 லட்சம் கோடியாக வளர்ச்சி அடையும் என்று ஜேஎல்எல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மேலும் கூறியிருப்பதாவது: ஆர்இஐடி சந்தை மதிப்பு சமீபத்தில் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது. இந்த நிலையில், அலுவலகம் மற்றும் சில்லறை விற்பனைத் துறைகளில் காணப்படும் வேகமான வளர்ச்சியை அடுத்து, அடுத்த 4 ஆண்டுகளில் இந்த மதிப்பானது ரூ.10.8 லட்சம் கோடியாக அதிகரிக்கும். இந்த வளர்ச்சியில் அலுவலக பிரிவின் பங்கு மட்டும் 65.3 சதவீதம் அளவுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2019-ம் ஆண்டில் 33 மில்லியன் சதுர அடியை நிர்வகித்து வந்த ஐந்து பட்டியலிடப்பட்ட அறக்கட்டளைகளில் ஆர்இஐடி 2025-ல் 174 மில்லியன் சதுர அடியாக வளர்ச்சி கண்டுள்ளது. இதில், கையகப்படுத்தப்பட்ட அளவு 91 சதவீதமாகும்.
இதுகுறித்து ஜேஎல்எல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் லதா பிள்ளை கூறுகையில், “இந்திய ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் ஆர்இஐடி-யின் சந்தை மூலதனம் 6 மடங்கு உயர்ந்துள்ளது" என்றார்.