புதுடெல்லி: இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தினை ஏற்படுத்துவதற்காக அமெரிக்காவுடன் இந்தியா நடத்தி வரும் பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று தெரிவித்தார்.
வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையை மேற்கொள்வதற்காக அமெரிக்க பிரதிநிதி ரிக் ஸ்விட்சர் அண்மையில் தனது குழுவினருடன் இந்தியா வந்தார். இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை டிசம்பர் 11-ம் தேதியுடன் முடிவடைந்தது.
இந்த நிலையில் பியூஷ் கோயல் அதுகுறித்து கூறுகையில், “அமெரிக்காவுடனான எங்களின் பேச்சுவார்த்தை மேம்பட்ட நிலையில் உள்ளது. ‘‘பைவ் ஐஸ்’’ (எப்விஇஒய்) கூட்டணியின் மூன்று உறுப்பினர்களான ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை இந்தியா இறுதி செய்துள்ளது. கனடாவுடனும் விரைவில் விதிமுறைகள் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்க உள்ளோம். உலக புவிசார் அரசியலில் இந்தியாவின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை இது பிரதிபலிக்கிறது’’ என்றார்.
உளவுத் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் வலையமைப்பில் ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகியவை உள்ளன.
கடந்த பிப்ரவரி மாதம், இரு நாடுகளின் தலைவர்களும் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையை நடத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். இதுவரை ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. தற்போதைய 191 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ள இருதரப்பு வர்த்தகத்தை, 2030-ஆம் ஆண்டிற்குள் 500 பில்லியன் டாலர்களாக அதிகரிப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.