ஈரோடு ரங்கம்பாளையத்தில் ‘காஸ் இல்லை’ என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ள ஆட்டோ காஸ் நிலையம்.

 

படம் : ஜி.வேல்முருகன்

வணிகம்

ஆட்டோ காஸ் கிடைப்பதில் சிக்கல்: எரிவாயுவால் இயங்கும் வாகனங்களை இயக்குபவர்கள் தவிப்பு

செய்திப்பிரிவு

சேலம்/ஈரோடு: அமெரிக்கா- ஈரான் இடையே நீடிக்கும் போரின் காரணமாக ஆட்டோ காஸ் பங்குகளுக்கு விநியோகம் குறைந்துவிட்டதால், சேலம் மாவட்டத்தில் பல பங்க்குகளில், ஆட்டோக்கள், கார்களுக்கு குறைந்த அளவே எரிவாயு விற்கப்படுகிறது.

அமெரிக்கா- ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போரால், வளைகுடா நாடுகளில் இருந்து எரிபொருள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டு, வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விநியோகம் தடைபட்டுள்ளது.

இந்நிலையில், எரிவாயுவால் இயங்கும் வாகனங்களுக்கும் போதுமான எரிவாயு கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியுள்ளது. சேலம் மாவட்டத்தில் பல்வேறு பங்க்குகளில் எரிவாயு இருப்பு குறைந்து கொண்டே வரும் நிலையில், பல பங்க்குகளுக்கு எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

          

இது குறித்து ஆட்டோ எல்பிஜி எரிவாயு பங்க் உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது: போர் தொடங்கிய அடுத்த சில நாட்களில் இருந்தே, பங்க்குகளுக்கு எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டது. பல பங்க்குகளில் ஏற்கெனவே இருப்பில் இருந்த எரிவாயுவை தொடர்ந்து விற்பனை செய்து வருகிறோம்.

குறிப்பாக, டேங்க் முழுவதையும் நிரப்பாமல் பாதியளவு மட்டுமே எரிவாயு விற்பனை செய்கிறோம். இதனால் உடனடி தட்டுப்பாடு இல்லை. ஆனால் இதுவரை எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து எரிவாயு விநியோகம் செய்யப்படாமல் உள்ளது. இருப்பு தீர்ந்துவிட்டால், ஆட்டோ எல்பிஜி பங்க்குள் மூடப்படும் நிலை ஏற்படும் என்றனர்.

இது குறித்து ஆட்டோ காஸால் இயங்கும் ஆட்டோ, கார்கள் வைத்துள்ளவர்களில் சிலர் கூறுகையில், ‘வாகனங்களுக்கு வாடிக்கையாக எரிவாயு நிரப்பும் பங்க்குகளில் கூட, குறைந்த அளவுக்கே எரிவாயு கொடுக்கின்றனர்.

குறிப்பாக, பயணிகளுக்கான ஆட்டோக்களுக்கு கூட, குறைந்த அளவே எரிவாயு விற்பனை செய்கின்றனர். அதிலும், கடந்த வாரம் லிட்டர் ரூ.54 ஆக விலை இருந்த நிலையில், தற்போது ரூ.64.50 ஆக விலையும் உயர்ந்துவிட்டது.

பங்க்குகளில் இருப்பு தீர்ந்துவிட்டால், ஆட்டோவை இயக்காமல் வீட்டிலேயே நிறுத்தி வைக்க நேரிடும்’’ என்றனர்.

இதனிடையே, வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால், உணவகங்கள், தேநீர் விடுதிகள் உள்ளிட்டவை சிக்கலை சந்தித்துள்ளன. உணவகங்கள் பலவற்றிலும் சமையலறையை பாரம்பரிய விறகு அடுப்புக்கு மாற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

சேலத்தில் உள்ள உணவகத்தில், சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக விறகு அடுப்பு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள்.

ஈரோட்டில் மூடல்...

ஈரோடு மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ காஸ் பங்க்குகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. சில பங்க்குகளில் ‘போர் பதற்றம் காரணமாக காஸ் இல்லை’ என்ற அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

இதனால் காஸில் இயங்கும் இருசக்கர வாகனங்கள், கார்கள், ஆட்டோக்களை பயன்படுத்தி வந்த வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே, இந்த பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு ஆட்டோ காஸ் விநியோகத்தை சீர்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோரிக்கை எழுந்துள்ளது.

SCROLL FOR NEXT