புதுடெல்லி: வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சென்னையில் ரூ.200 குறைக்கப்பட்டது.
சர்வதேச சந்தை விலை நிலவரத்துக்கு ஏற்ப வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு (எல்பிஜி) சிலிண்டர் விலை மாதந்தோறும் 1-ம் தேதி மாற்றி அமைக்கப்படுகிறது. எனினும், மதிப்புக் கூட்டு வரி போன்ற உள்ளூர் வரிகளைப் பொறுத்து மாநிலத்துக்குகு மாநிலம் அதன் விலை சற்று மாறுபடும்.
அந்த வகையில், கடந்த ஜூலை மாதம் டெல்லியில் ரூ.2,930-க்கு விற்கப்பட்ட 19 கிலோ வணிக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் இப்போது ரூ.2,738-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது கடந்த மாத விலையைவிட ரூ.192 குறைவு. சென்னையில் வர்த்தக சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்பட்டு, ரூ.2,906-க்கு விற்பனையாகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.957.50-க்கும் விற்பனையாகிறது.
கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்கா, ஈரான் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து, ஹார்முஸ் ஜலசந்தியில் கச்சா எண்ணெய், சமையல் எரிவாயு கப்பல்கள் போக்குவரத்து முடங்கியது. இதனால் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டர் விலை ஜூன் 1-ம் தேதி ரூ.1,373 உயர்த்தப்பட்டது. அதாவது ரூ.1,740.50-ல் இருந்து ரூ.3,113.50 ஆக உயர்த்தப்பட்டது. பின்னர் போர் சற்று தணிந்தது. இதையடுத்து, ஜூலை 1-ம் தேதி ரூ.183 குறைக்கப்பட்டது. இப்போது 2-வது மாதமாக அதன் விலை குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் 5 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலையும் ரூ.808.50-ல் இருந்து ரூ.762 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கடந்த மாதம் ரூ.110 ஆக இருந்த ஒரு லிட்டர் விமான எரிபொருள் விலை ரூ.115 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எனினும், வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை டெல்லியில் ரூ.942 என்ற அளவில் மாற்றமின்றி தொடர்கிறது.