புதுடெல்லி: பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பு செய்யப்படவில்லை என்றால், ஈரான் போர் சமயத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.125-ஆக அதிகரித்திருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அரசின் இ20 திட்டத்தில் 80% பெட்ரோலுடன் 20% எத்தனால் கலந்து விற்பனை செய்யப்படுகிறது. இத்திட்டம் எதிர்க்கட்சிகள் மற்றும் நுகர்வோர் அமைப்புகளிடமிருந்து கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. 2023-ம் ஆண்டுக்கு முந்தைய வாகனங்களை வைத்துள்ள பல உரிமையாளர்கள், இ20 பெட்ரோலால் மைலேஜ் குறைவதாகவும், பராமரிப்புச் செலவு அதிகரிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த புகார்களை நிராகரித்துள்ள பெட்ரோலியத்துறை அமைச்சகம் 4-வது முறையாக அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது:
அமெரிக்க-ஈரான் போரின் போது கச்சா எண்ணெய் விலை விண்ணைத் தொட்டது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 135 அமெரிக்க டாலரை எட்டியது. அப்போது பெட்ரோலின் விலை டெல்லியில் லிட்டருக்கு ரூ.125-ஆக உயர்ந்திருக்கும். ஆனால் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலந்து விற்கப்பட்டதால், ஒரு லிட்டர் பெட்ரோல் இங்கு ரூ,95-க்கு மட்டுமே விற்கப்பட்டது.
இதனால் நெருக்கடியின் போது நுகர்வோருக்கு ரூ.30 வரை சேமிப்பு கிடைத்தது. ஈரான் போரின் போது சுமார் இரண்டு மாதங்களாகப் பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இறுதியில், மே மாதத்தில் அரசு லிட்டருக்கு ரூ. 7.5 உயர்த்தியது. இ20 பெட்ரோலால், மைலேஜ் சற்று குறைந்தாலும் அதனால் கிடைக்கும் நன்மைகள் மிக அதிகம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.