சென்னை: இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை முடங்கியதால் மற்ற விமான நிறுவனங்களில் டிக்கெட் கட்டணம் வரலாறு காணாத வகையில் உயர்ந்தது.
இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான சேவை நாடு முழுவதும் முடங்கியுள்ளது. சென்னை விமான நிலையத்திலும் நேற்று 4-வது நாளாக இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால், பயணிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர்.
அதேநேரம், ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட் நிறுவனங்களின் விமானங்கள் தொடர்ந்து இயங்கி வருவதால், அந்த விமானங்களில் டிக்கெட் கட்டணம் வரலாறு காணாத அளவுக்கு பலமடங்கு உயர்ந்துள்ளது.
சென்னையில் இருந்து கோவை செல்வதற்கு வழக்கமாக ரூ.10 ஆயிரம் வரை மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், தற்போது ஏர் இந்தியா விமானத்தில் ரூ.55 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சென்னை - திருச்சி இடையே இன்று நேரடி விமானம் இல்லை என்று கூறி, மும்பை, பெங்களூரு வழியாக 36 மணி நேரம் பயணம் செய்து, திருச்சி செல்ல ரூ.40,800 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை - கொச்சி ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் ரூ.27 ஆயிரம், சென்னை - டெல்லி ஏர் இந்தியா விமானத்தில் ரூ.36 ஆயிரம், சென்னை - பெங்களூரு ஏர் இந்தியா விமானத்தில் ரூ.17 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சென்னையில் இருந்து மதுரை, தூத்துக்குடி, சேலத்துக்கு நேற்று விமானம் இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது.