புதுடெல்லி: நாட்டின் மரபுசாரா எரிசக்தி உற்பத்தி 50 சதவீதம் அதிகரித்திருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி துவாரகா பகுதியில், “பாரத் மின்சார உச்சி மாநாடு” நேற்று தொடங்கியது. இந்த மாநாடு வரும் 22-ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 25,000-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்று உள்ளனர். மாநாட்டை ஒட்டி சிறப்பு கண்காட்சி நடைபெறுகிறது. 500-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.
மாநாட்டின் முதல் நாளில் பிரதமர் நரேந்திர மோடியின் உரையை மத்திய எரிசக்தித் துறை செயலாளர் பங்கஜ் அகர்வால் வாசித்தார். அதில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: 500 ஜிகாவாட் இலக்கு.. வரும் 2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயித்து உள்ளோம். இதற்கேற்ப நாட்டின் எரிசக்தி உள்கட்டமைப்பு தொடர்ந்து வலுப்படுத்தப்பட்டு வருகிறது. மரபுசாரா எரிசக்தி உற்பத்தி 50 சதவீதம் அதிகரித்திருக்கிறது.
வரும் 2030-ம் ஆண்டுக்குள் மரபுசாரா எரிசக்தி உற்பத்தியை 500 ஜிகாவாட்டாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டு இருக்கிறது. ஒரே சூரியன் - ஒரே உலகம், பிஎம் சூரிய கர் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அணு சக்தி மின்சார உற்பத்தியை அதிகரிக்க சாந்தி சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. இந்த நேரத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் இந்திய எரிசக்திதுறையில் அதிக அளவில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கிறேன். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மத்திய மின்சாரத் துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார் பேசும்போது, “மின்சாரம் என்பது எரிசக்தி மட்டும் கிடையாது. நாட்டின் வளர்ச்சிக்கான ஏணி ஆகும். உலக நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் மின் கட்டணம் மிகவும் குறைவாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் புதிதாக 2.09 லட்சம் கி.மீ. தொலைவுக்கு புதிதாக மின் தடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன” என்று தெரிவித்தார்.
மாநாடு தொடர்பாக மத்திய மின்சாரத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: நாடு முழுவதும் நிலக்கரியை அடிப்படையாக கொண்ட அனல் மின் நிலையங்கள் மூலம் 43.77 சதவீத மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. சூரிய சக்தி, காற்றாலை, நீர் மின் நிலையங்கள், அணு மின் நிலையங்கள் மூலம் 50.56 சதவீத மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதன்படி மரபுசாரா எரிசக்தி உற்பத்தி 50 சதவீதத்தைத் தாண்டி உள்ளது. டெல்லி மாநாட்டின் மூலம் இந்திய எரிசக்தி துறையில் ரூ.50 லட்சம் கோடி முதலீட்டை ஈர்க்க திட்டமிடப்பட்டு உள்ளது. குறிப்பாக இந்தியாவின் சூரிய மின் உற்பத்தி, காற்றாலை, நீர் மின் திட்டங்களில் அதிக அளவில் முதலீடுகளை ஈர்க்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இவ்வாறு மத்திய மின்சார துறை வட்டாரங்கள் தெரிவித்தன.