விளாத்திகுளம் மாணவி கொலையில் தேடப்பட்ட குற்றவாளி 10 நாட்களுக்குப் பிறகு கைது

வேறொரு பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று ஜாமீனில் வந்தவர்
தர்ம முனீஸ்வரன்

தர்ம முனீஸ்வரன்

Updated on
2 min read

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்தி குளம் மாணவி கொலை வழக்கில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயுள் தண்டனை குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

குளத்தூர் அருகே வேடநத்தத்தைச் சேர்ந்த தொழிலாளி சுப்புராஜ் என்பவரது 17 வயது மகள், 12-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 10-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை.

மறுநாள் (11-ம் தேதி) மாலை இக்கிராமத்தின் அருகேயுள்ள காட்டுப்பகுதியில் கொடூரமான காயங்களுடன் அவரது உடல் மீட்கப்பட்டது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

10 தனிப்படைகள் அமைப்பு

போலீஸ் தரப்பில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், வேடநத்தம் காட்டுப்பகுதியில் கடந்த 9-ம் தேதி முதல் மோட்டார் சைக்கிள் ஒன்று நிற்பது தெரியவந்தது. அந்த மோட்டார் சைக்கிள் ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் இருந்து திருடப்பட்டது தெரியவந்தது.

சம்பவ இடத்தில் உள்ள காற்றாலைகளின் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முனியசாமி மகன் மாவீரன் என்ற தர்ம முனீஸ்வரன் (37) நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார். இவர் 30-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்.

ஆயுள் தண்டனை குற்றவாளி

தூத்துக்குடி மாவட்டம் கீழ ஈரால் பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு பிப்.2-ம் தேதி பாப்பா(65) என்ற மூதாட்டியின் நகைகள் திருடப்பட்டு, பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்யப்பட்டார்.

இதில் தர்ம முனீஸ்வரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து, தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. தர்ம முனீஸ்வரன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில், கடந்த டிசம்பர் 18-ல் நிபந்தனை ஜாமீன் கிடைத்தது.

நீதிமன்ற உத்தரவுப்படி அவர் தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளார். இதற்காக அவர் சாயல்குடியில் இருந்து வேடநத்தம் வழியாக தூத்துக்குடிக்கு சென்று வந்துள்ளார். அப்போது, வேடநத்தம் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.

எஸ்.பி. விளக்கம்

இதுதொடர்பாக, தூத்துக்குடி எஸ்.பி. மதன் கூறியதாவது: இவ்வழக்கில் 4 டிஎஸ்பி.க்கள், 6 ஆய்வாளர்கள் உள்ளிட்ட 150 போலீஸாரை கொண்ட 10 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி, தென்மண்டல ஐஜி ஆகியோர் 3 நாட்கள் இங்கே முகாமிட்டு விசாரணையை முடுக்கிவிட்டனர். நெல்லை சரக டிஐஜி தினமும் வந்து விசாரணையை கண்காணித்தார். 98 கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள், 2,979 செல்போன் அழைப்புகள் ஆய்வு செய்யப்பட்டன.

இதுபோன்ற குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள், சிறையில் இருந்து வெளிவந்தவர்கள், குற்றப் பின்னணி உள்ளவர்கள் என 461 பேர் விசாரிக்கப்பட்டனர். வேடநத்தம் பகுதியில் உள்ள சுமார் 800 ஆண்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணைகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு, அதன்அடிப்படையில் இதில் தொடர் புடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு மாணவி கொலை செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள நபர் மீது ஏற்கெனவே பல வழக்குகள் உள்ளன. அவருக்கு அரசியல் பின்னணி எதுவும் இல்லை. இந்த விசாரணையை உயர் நீதிமன்றமும் கண்காணித்து வருகிறது. குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

காவல்துறையின் அறிவுரையை மீறி சிறுமியின் புகைப்படம் மற்றும் பெயரை பயன்படுத்தியதாக போக்சோ சட்டத்தின் கீழ் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு எஸ்.பி. தெரிவித் தார்.

மாணவி உடலை பெற சம்மதம்

மாணவியின் தந்தை சுப்புராஜ் கூறும்போது, “எனது மகள் கொலை செய்யப்பட்டு 10 நாட்களுக்கு பின்னர் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள எனது மகள் உடலை நாளை (இன்று) பெற்று அடக்கம் செய்வோம்.

குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். கடும் தண்டனை வழங்கினால் தான் இதுபோல் கொடூர சம்பவம் நடக்காது தடுக்கப்படும்’’ என்றார்.

<div class="paragraphs"><p>தர்ம முனீஸ்வரன்</p></div>
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 20 மார்ச் 2026

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in