புதுடெல்லி: சமையல் காஸ் சிலிண்டர் முன்பதிவில் கட்டுப்பாடு எதுவும் விதிக்கவில்லை என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளிடையே மத்தியக் கிழக்கில் நடந்து வரும் போரால் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு, சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு உருவாகியுள்ளது. இந்நிலையில், காஸ் சிலிண்டர் முன்பதிவில் மீண்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியானது.
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா பயனாளிகள் மீண்டும் காஸ் சிலிண்டரை முன்பதிவு செய்ய 45 நாட்கள் அவகாசம் விதிக்கப்பட்டு உள்ளது என்றும், பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டப் பயனாளிகள் அல்லாத பிறர், ஒரு சிலிண்டர் இணைப்புக்கு 25 நாட்களுக்கும், 2 சிலிண்டர் இணைப்புக்கு 35 நாட்களும் காத்திருக்க வேண்டும் என்று விதிகளில் புதிய மாற்றம் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், அவ்வாறு கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "இஸ்ரேல்- அமெரிக்கா, ஈரான் இடையிலான போரால் வளைகுடா நாடுகளில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் கச்சா எண்ணெய், எல்பிஜி எரிவாயு பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது சமையல் காஸ் சிலிண்டர் முன்பதிவில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதாக வந்துள்ள செய்திகளில் உண்மையில்லை.
சிலிண்டர் முன்பதிவில் எந்தவித கட்டுப்பாட்டையும் நாங்கள் விதிக்கவில்லை. அதுபோன்று எந்த மாற்றத்தையும் நாங்கள் கொண்டு வரவில்லை. ஏற்கெனவே உள்ளது போல நகரப் பகுதிகளில் 25 நாட்களும் ஊரகப் பகுதிகளில் 45 நாட்களும் காஸ் சிலிண்டர் முன்பதிவுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இத்தகைய வதந்திகளை நம்ப வேண்டாம். பதற்றத்தில் தேவையில்லாமல் முன்பதிவு செய்ய வேண்டியதில்லை. நாட்டில் போதிய எல்பிஜி சிலிண்டர் கையிருப்பில் உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.