புதுடெல்லி: யுபிஐ தானியங்கி பரிவர்த்தனைக்கு 0.4% எம்டிஆர் கட்டணம் வசூலிக்கப்படாது என இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (என்பிசிஐ) தெளிவுப்படுத்தியுள்ளது. அதேநேரம் சிறிய அளவில் கட்டணம் உண்டு என தெரிவித்துள்ளது.
அக்டோபர் 15-ம் தேதி முதல் ரூ.2,000-க்கும் மேற்பட்ட வணிகம் சார்ந்த யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீதம் கட்டணம் (எம்டிஆர்) விதிக்கப்படும் என இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (என்பிசிஐ) அறிவித்துள்ளது.
இந்நிலையில், யுபிஐ தானியங்கி (ஆட்டோபே) முறையில் செலுத்தப்படும் மாதந்திர கட்டணங்களுக்கு எம்டிஆர் கட்டணம் வசூலிக்கப்படுமா என்பது குறித்து என்பிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “வழக்கமான வணிக பயன்பாட்டுக்காக யுபிஐ வாயிலாக கட்டணம் செலுத்தும் முறைக்கும் ஆட்டோபே முறைக்கும் இடையே முக்கிய வேறுபாடு உள்ளது. எனவே தானியங்கி முறை இந்தப் புதிய எம்டிஆர் கட்டமைப்பிலிருந்து விலக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, ஒரு பயனர் ரூ.2,500 மாதாந்திர ஓடிடி சந்தாவை கொண்டிருந்து, யுபிஐ தானியங்கி முறையில் பணம் செலுத்த அங்கீகாரம் அளித்திருந்தால், அந்தத் தொகை தானாகவே வசூலிக்கப்படும். குறிப்பிட்ட அதிக மதிப்புள்ள வணிகர் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான புதிய எம்டிஆர் கட்டமைப்பு என்பது, தொடர் கட்டணம் ரூ.2,000-ஐ தாண்டுகிறது என்பதற்காக மட்டும் பயனர் திடீரெனக் கூடுதலாக 0.4% செலுத்த வேண்டும் என்று அர்த்தமல்ல” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்டோபே என்றால் என்ன?
யுபிஐ ஆட்டோபே, பயனர்கள் தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து தொடர்ச்சியாக குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு குறிப்பிட்ட தொகையை தானாகவே வசூலிக்க ஒரு வணிகர் அல்லது சேவை வழங்குநருக்கு அதிகாரம் அளிக்கும் முறையாகும். மின்சாரம் மற்றும் மொபைல் கட்டணங்கள், மாதந்திர தவணைகள், காப்பீட்டு பிரீமியங்கள், ஓடிடி சந்தாக்கள் மற்றும் பரஸ்பர நிதி பரிவர்த்தனை உள்ளிட்டவற்றுக்கு இதைப் பயன்படுத்தலாம்.