புதுடெல்லி: வரும் ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து புதிய தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: தொழிலாளர் நலனுக்கான பழைய 29 சட்டங்களை ஒருங்கிணைத்து 4 புதிய தொழிலாளர் சட்டங்களை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. அதன்படி, ஊதிய சட்டம் 2019, தொழிலக உறவு விதி 2020, சமூக பாதுகாப்பு சட்டம் 2020, பணிப் பாதுகாப்பு, சுகாதாரம், பணிச்சூழல் விதி 2020 ஆகிய 4 சட்டங்களை அமல்படுத்துவதற்கான அறிவிக்கை கடந்த நவம்பர் 21ம் தேதி வெளியிடப்பட்டது.
இந்த 4 புதிய சட்டங்களையும் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான வரைவு விதிகளை தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம் விரைவில் வெளியிடும். பொதுமக்களின் கருத்து கேட்புக்காக 45 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும். அதன் பிறகு தேவைப்பட்டால் மாற்றங்களுடன் அமலுக்கு வரும். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.