வணிகம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவைத் தொடர்ந்து எல்என்ஜி காஸ் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்

மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அறிவிப்பு; தொழில் துறை வரவேற்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: எல்​என்ஜி (திரவ இயற்கை எரிவாயு) மீதான அனைத்து கட்​டுப்​பாடு​களும் நீக்​கப்​பட்​டிருப்​ப​தாக மத்​திய பெட்​ரோலிய அமைச்​சகம் அறி​வித்​துள்​ளது.

அமெரிக்​கா - ஈரான் இடையே கடந்த பிப்.28 முதல் போர் நடை​பெற்று வந்​தது. கடந்த ஏப்.​8-ம் தேதி இருதரப்​பும் இணைந்து தற்​காலிக போர் நிறுத்​தத்தை அமல்படுத்தின. நீண்ட பேச்​சு​வார்த்​தைக்​குப் பிறகு கடந்த ஜூன் 18-ம் தேதி இரு நாடு​கள் இடையே தற்​காலிக அமைதி ஒப்​பந்​தம் கையெழுத்​தானது.

போர்க் காலத்​தில் ஈரானை ஒட்​டிய ஹார்​முஸ் ஜலசந்தி மூடப்​பட்டு உலகம் முழு​வதும் கச்சா எண்​ணெய்க்கு கடும் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டது. இந்​தி​யா​வில் பெட்​ரோல், டீசல், எல்​பிஜி சமையல் காஸ் மற்​றும் எல்​என்ஜி காஸுக்குதட்​டுப்​பாடு ஏற்​பட்​டது. பெட்​ரோல், டீசல், காஸ் விநி​யோகத்​துக்கு பல்​வேறு கட்​டுப்​பாடு​கள் விதிக்​கப்​பட்​டன.

கடந்த மாதம் 18-ம் தேதிக்​குப் பிறகு ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் சரக்கு கப்​பல் போக்​கு​வரத்து இயல்பு நிலைக்கு திரும்​பியது. இதைத் தொடர்ந்து பெட்​ரோல், டீசல், சமையல் காஸ் மீதான அனைத்து கட்​டுப்​பாடு​களை​யும் மத்​திய பெட்​ரோலிய அமைச்​சகம் கடந்த 1-ம் தேதி நீக்​கியது. ஆனால், தொழிற்​சாலைகளில் பயன்​படுத்​தப்​படும் எல்​என்ஜி காஸுக்​கான கட்​டுப்​பாடு​கள் நீக்​கப்​பட​வில்​லை.

இந்​தி​யா​வின் எல்​என்ஜி தேவை​யில் சுமார் 65 சதவீதம் வளை​குடா நாடு​களில் இருந்து இறக்​குமதி செய்​யப்​படு​கிறது. தற்​போது வளை​குடா நாடு​களின் சரக்கு கப்​பல் போக்​கு​வரத்து சீரடைந்துள்ள​தால் எல்​என்ஜி மீதான அனைத்து கட்​டுப்​பாடு​களும் நீக்​கப்​பட்டு இருப்​ப​தாக மத்​திய பெட்​ரோலிய அமைச்​சகம் அறி​வித்​துள்​ளது.

இதுகுறித்து தொழில் துறை வட்​டாரங்​கள் கூறிய​தாவது: எல்​என்ஜி காஸ் மூலமாகவே உள்​நாட்டு உரத் தொழிற்​சாலைகள் இயங்குகின்​றன. அமெரிக்கா - ஈரான் போரால் எல்​என்ஜி காஸுக்கு தட்​டுப்​பாடு ஏற்​பட்டு உரத் தொழிற்​சாலைகளில் உற்​பத்தி பாதிக்​கப்​பட்​டது. இதன் ​விளை​வாக நாட்​டின் வேளாண் சாகுபடி கடுமை​யாக பாதிக்​கப்​படும் சூழல் எழுந்​தது. இதனாலேயே இயற்கை வேளாண்​மைக்கு விவ​சா​யிகள் மாற வேண்​டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்​தார்.

மேலும் எல்​என்ஜி காஸை அடிப்​படை​யாக வைத்து பல்​வேறு மின் உற்​பத்தி ஆலைகள் செயல்​படு​கின்​றன. அவை மூடப்​பட்​ட​தால் மின்​சார தட்​டுப்​பாடு ஏற்​படும் ஆபத்து எழுந்​தது. உருக்​கு,சிமென்ட், கண்​ணாடி, பிளாஸ்​டிக், ரசாயன ஆலைகளி​லும் உற்​பத்தி பாதிக்​கப்​பட்​டது. இதனால் இப்பொருட்​களின் விலை உயரும் நிலை ஏற்​பட்​டது.

தற்​போது ஹார்​முஸ் ஜலசந்தி திறக்​கப்​பட்டு சரக்கு கப்பல் போக்​கு​வரத்து இயல்பு நிலைக்கு திரும்​பி​யிருப்​ப​தால் இந்​திய தொழில் துறைக்கு புதியஉத்​வேகம் கிடைத்​திருக்​கிறது. குறிப்​பாக எல்​என்ஜி மீதான கட்​டுப்​பாடு​கள் நீக்​கப்​பட்​டு, மீண்​டும் தடை​யின்றி விநி​யோகம் செய்​யப்​படும் என்ற பெட்​ரோலியஅமைச்​சகத்​தின் உத்​தரவை முழு​மனதோடு வரவேற்​கிறோம். இவ்​வாறு தொழில் ​துறை வட்​டாரங்​கள்​ தெரிவித்​துள்​ளன.

SCROLL FOR NEXT