வணிகம்

டிவிஎஸ் விவகாரம்: தந்தை சொத்துகளில் சம பங்கு கோரும் லட்சுமி வேணு

மோகன் கணபதி

சென்னை: தனது தந்தையின் சொத்துகளில் தனக்கு சம பங்கு வழங்கப்பட வேண்டும் என டிவிஎஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசனின் மகள் லட்சுமி வேணு வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக லட்சுமி வேணு தனது தந்தை வேணு சீனிவாசனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். வேணு சீனிவாசன் ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், தற்போது அவருக்கு அவரது மகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

லட்சுமி வேணு பத்திரிகைகளுக்கு அளித்துள்ள அறிக்கையில், ‘1956-ம் ஆண்டின் இந்து வாரிசுரிமைச் சட்டத்தின்படியும், 2005-ல் அதில் கொண்டுவரப்பட்ட 6-வது பிரிவின்படியும், குடும்பச் சொத்துகளில் பெண்களுக்கும் ஆண்களுக்கு இணையான வாரிசுரிமை உண்டு. ஆனால், கூட்டுக் குடும்பச் சொத்தில் எனக்கு சேர வேண்டிய நியாயமான பங்கு, அநீதியான முறையில் மறுக்கப்படுகிறது.

சட்டத்திலோ அல்லது முன்னேறி வரும் இந்தியாவிலோ ஆணாதிக்கத்துக்கு இடமில்லை. தனிப்பட்ட முடிவுகள் அல்லது நிறுவன ஏற்பாடுகள் மூலம், கூட்டுக் குடும்பச் சொத்தில் மகள்களுக்கு உள்ள உரிமையை யாராலும் பறிக்க முடியாது’ என தெரிவித்துள்ளார்.

டிவிஎஸ் மோட்டார்ஸ் கம்பெனியின் முக்கிய உரிமையாளராக லட்சுமி வேணுவின் தம்பி சுதர்சன் வேணு 2025-ல் அறிவிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, லட்சுமி வேணு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முக்கிய உரிமையாளராக சுதர்சன் வேணு அறிவிக்கப்பட்டுள்ளதால், டிவிஎஸ் ஹோல்டிங்ஸ் நிறுவத்தின் கீழ் உள்ள வணிகங்களில் பெரும்பகுதி அவருக்குச் செல்லக்கூடும் என்பதால், லட்சுமி வேணு சட்டப்படி தனக்குரிய பங்கை கோரி நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

லட்சுமி வேணுவின் கோரிக்கைக்கு அவரது தாயாரான மல்லிகா சீனிவாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “ஒரு தாயாக என்னைப் பொறுத்தவரை, மகனும் மகளும் எல்லா வையிலும் சமமானவர்களே.

குடும்பச் சொத்துகளில் லட்சுமிக்கு நியாயமான பங்கு உண்டு என்பதிலும், அது சுதர்சனின் பங்குக்கு எந்த வகையிலும் குறைவானதல்ல என்பதிலும் நான் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.

சம்பந்தப்பட்ட அனைவரும் பயனடையும் வகையில், வெளிப்படையான உரையாடல், சமத்துவம், தெளிவு மற்றும் சுமுகமான உறவு ஆகியவற்றின் மூலம் இந்த பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். நாம் கண்ணியத்துடனும், கவுரவத்துடனும் ஆக்கப்பூர்வமாக முன்னேற முடியும் என்று நான் மனதார நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

வேணு சீனிவாசனின் தலைமையிலான டிவிஎஸ் ஹோல்டிங்ஸ், டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் உரிமையைக் கொண்டுள்ளது. இந்தியாவின் இருசக்கர வாகன உற்பத்தியில் மூன்றாவது பெரிய நிறுவனமான டிவிஎஸ் மோட்டார்ஸ், 20 பில்லியன் டாலருக்கும் அதிகமான சந்தை மதிப்பைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT