இங்கிலாந்தைத் தலைமையிடமாகக் கொண்ட இந்திய வம்சாவளி தொழிலதிபர் லஷ்மி மிட்டல் மற்றும் ஆதர் பூனாவாலா இணைந்து ஐபிஎல் அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் பங்குகளை வாங்கியுள்ளனர். இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 1.65 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.15,660 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய கூட்டணியில், தற்போதைய பிரதான உரிமையாளரான மனோஜ் பதாலேயுடன் சேர்ந்து மிட்டல் குடும்பமும், பூனாவாலாவும் இணைந்து செயல்பட உள்ளனர். மேலும், இந்த கூட்டணி பார்ல் ராயல்ஸ் மற்றும் பார்பேடோஸ் ராயல்ஸ் ஆகிய அணிகளிலும் உரிமையைப் பெறுகிறது.
2008 முதல் ஐபிஎல் தொடரில் இடம்பெற்று வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை மனோஜ் பதாலே வெறும் 67 மில்லியன் டாலர்களுக்கு வாங்கியிருந்தார். தற்போது இந்த அணியின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒப்பந்தம் கடந்த சில மாதங்களாக நிலவி வந்த உரிமை தொடர்பான குழப்பங்களுக்கு முடிவு கட்டுகிறது. முன்னதாக, அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வாங்குகின்றனர் எனத் தகவல்கள் வெளியாகின. ஆனால் அது நடைமுறைக்கு வரவில்லை.
ஒப்பந்தத்தின் படி, மிட்டல் குடும்பம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சுமார் 75% பங்குகளைப் பெறும். ஆதர் பூனாவாலா சுமார் 18% பங்குகளை வைத்திருப்பார். மீதமுள்ள 7% பங்குகள் மனோஜ் பதாலே உள்ளிட்ட தற்போதைய முதலீட்டாளர்களிடம் தொடரும். பதாலே அணியின் நிர்வாகத்தில் தொடர்ந்தும் பங்கு பெறுவார்.
லஷ்மி மிட்டலின் மகன் ஆதித்யா மிட்டல் எதிர்காலத்தில் அணியின் முக்கிய முகமாக அமைய வாய்ப்பு உள்ளது. அவர் 2025-ம் ஆண்டு பாஸ்டன் செல்டிக் அணியில் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்து விளையாட்டு துறையில் தன் தடத்தை பதித்திருந்தார். மேலும், மிட்டல் குடும்பம் 2007-ம் ஆண்டு குவீன்ஸ்பார்க் ரேஞ்சர்ஸ் கிளப்பிலும் பங்குகளை பெற்றிருந்தது.
“எனக்கு கிரிக்கெட் மிகவும் பிடிக்கும். என் குடும்பத்தின் வேர்கள் ராஜஸ்தானில் இருப்பதால், இந்த அணியில் பங்கேற்பது எனக்கு பெருமையாகும். பள்ளி காலத்தில் நான் கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பல சிறந்த வீரர்கள் விளையாடியுள்ளனர். எதிர்கால வெற்றிக்காக ரசிகர்களுடன் இணைந்து களத்தில் உற்சாகப்படுத்த ஆவலாக உள்ளேன்,” என்று லஷ்மி மிட்டல் தெரிவித்துள்ளார்.