புதுடெல்லி: ஸ்விக்கியின் அங்கமான இன்ஸ்டாமார்ட் நிறுவனம் மளிகை, வீட்டு உபயோகப் பொருட்களை 10 நிமிடங்களில் விநியோகம் செய்து வருகிறது. தற்போது சமையல் காஸ் சிலிண்டரும் தங்கள் செயலியின் மூலம் விநியோகம் செய்யப்படும் என இன்ஸ்டா மார்ட் தெரிவித்துள்ளது.
இதற்காக இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (ஹெச்பிசிஎல்) நிறுவனத்துடன் ஸ்விக்கி ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தத் திட்டம் முதல்கட்டமாக பெங்களூவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அங்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து, விரைவில் சென்னை, டெல்லி, கொல்கத்தா,மும்பை உள்ளிட்ட நாட்டின் பிற முக்கிய நகரங்களுக்கும் இந்த சேவை விரிவுபடுத்தப்படும்.
தொடக்கத்தில் 10 கிலோ எடையுள்ள ஹெச்பி நவ்யா சிலிண்டரும், சிறிய தேவைகளுக்கான 5 கிலோ எடையுள்ள வழக்கமான மெட்டல் சிலிண்டரும் கிடைக்கும். இந்தச் சேவையைப் பெற ஏற்கெனவே சிலிண்டர் இணைப்பு இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மேலும் வழக்கமான முறையைப் போலவே முதல்முறை வாங்கும்போது காலி சிலிண்டர் தரவேண்டாம், அடுத்தடுத்த முறை காலி சிலிண்டர்களை கொடுத்து பெற்றுக் கொள்ளலாம்.