அமராவதி: தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான இன்போசிஸ், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 20 ஏக்கர் பரப்பளவில் புதிய நிரந்தர வளாகத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 20 ஏக்கரில் நிரந்தர வளாகம் அமைக்கப்பட உள்ளது. இப்புதிய வளாகத்தில் சுமார் 7,000 ஐடி பணியாளர்கள் பணியாற்றும் வகையில் வசதிகள் செய்யப்படவுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தத் துறைமுக நகரில் இன்போசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது.
ஆரம்பத்தில் 250 ஊழியர்களுடன் தொடங்கப்பட்ட இந்த மையம், தற்போது 1,900 ஊழியர்களுடன் இயங்கி வருகிறது. விரைவில் மேலும் 750 பேர் பணியாற்றுவதற்கான இடவசதிகள் தயார் செய்யப்படவுள்ளன.
சிறந்த ஐ.டி. மையம்
20 ஏக்கரில் அமையவுள்ள நிரந்தர வளாகம் இப்பகுதியின் நீண்டகால வளர்ச்சிக்குச் சான்றாக அமையும். இந்த மையத்திற்காக விசாகப்பட்டினம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 1,000 புதிய பட்டதாரிகளும், 500 அனுபவம் வாய்ந்த பணியாளர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது ஆந்திர அரசின் திறன் மேம்பாட்டுத் திட்டங்களுக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதப்படுகிறது. இவ்வாறு இன்போசிஸ் தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் நாரா லோகேஷ் கூறுகையில், “விசாகப்பட்டினம் ஒரு சிறந்த ஐடி மையமாக உருவெடுத்து வருவது, அங்குள்ள உள்ளூர் திறமையாளர்களின் வலிமையைக் காட்டுகிறது. ஆந்திர மாநிலத்தைத் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான உலகளாவிய மையமாக மாற்றுவதே எங்களது நோக்கம்.
இன்போசிஸ் நிறுவனத்தின் இந்த விரிவாக்கம் எங்களது கொள்கை முடிவுகளுக்குக் கிடைத்த அங்கீகாரமாகும். தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆந்திர மாநிலம் தனது நிலையைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது” என்றார்.