வணிகம்

புதிய தொழிலாளர் சட்டம் மிகப் பெரிய சீர்திருத்தம்: தொழில் அமைப்புகள் வரவேற்பு

செய்திப்பிரிவு

புதிய தொழிலாளர் சட்டம் என்பது, ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் அமலுக்கு வந்த பின் நாட்டில் கொண்டு வரப்பட்டுள்ள மிகப் பெரிய சீர்திருத்தமாகும். இந்நடவடிக்கை இந்தியாவின் வணிகத்தை உலக சந்தையில் பெரிதும் உயர்த்தும் என கோவை தொழில் துறையினர் தெரிவித்தனர்.

தமிழ்நாடு சிறு தொழில்கள் சங்கம் (டான்ஸ்சியா) துணைத் தலைவர் சுருளிவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதிய தொழிலாளர் குறியீடுகளை மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். 29 தனித்தனியான சட்டங்களை 4 முக்கிய குறியீடுகளாக ஒருங்கிணைத்தது தொழிலும் தொழிலாளர்களும் பயனடையும் முன்னேற்றமான மாற்றமாகும்.

அனைத்து ஊழியர்களுக்கும் கட்டாயமாக நியமன ஆணை வழங்கல், 10 பேருக்கு குறைவாக வேலை செய்யும் நிறுவனங்களுக்கும் ESI வழங்கப்பட்டு, அதிகமான தொழிலாளர்கள் காப்பீட்டின்கீழ் கொண்டுவருதல், ஒரே ஆண்டில் 30 நாட்கள் மட்டுமே வேலை செய்தாலும் போனஸ் பெறும் உரிமை பெறுதல் மற்றும் தொழில் நிறுவனத்தினர் உரிமங்கள் பெறும் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.

40 பேருக்கு மேல் பணியாற்றும் தொழிற்சாலைகளில் ஆண்டுதோறும் மருத்துவ பரிசோதனை, அனைத்து ஊழியர்களுக்கும் சரியான நேரத்தில் ஊதியம் வழங்குதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஓராண்டு பணி முடித்தாலே பணிக்கொடை பெறும் உரிமை, இந்திய அளவில் ஒரே மாதிரியான குறைந்தபட்ச ஊதிய அமைப்பு, மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும் குழப்பத்தை நீக்குதல் போன்ற பல்வேறு நன்மைகள் இந்த சட்டத்தில் உள்ளன. இந்த மாற்றங்கள் தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பை உயர்த்துவதுடன், தொழில் வளர்ச்சி, வெளிப்படைத் தன்மை மற்றும் வேலை வாய்ப்பின் முறையான அமைப்புகளை அதிகரிக்க உதவும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய மில்கள் சங்கத்தின் (சைமா) தலைவர் துரை பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டி தொடங்கிய தென்னிந்திய மில்கள் சங்கம் (சைமா) தொழிலாளர் நலன் பாதுகாப்பதிலும், பல்வேறு முற்போக்கு சட்டங்களை கொண்டு வருவதிலும் முன்னோடியாக இருந்து வருகிறது. விவசாயத்திற்கு அடுத்து நாடு முழுவதும் 11 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது.

தற்போது வரலாற்று சிறப்புமிக்க தொழிற் சட்டங்களை பிரதமர் அமல்படுத்தி சாதனை படைத்துள்ளார். அவருக்கு நன்றி தெரிவிக்கிறோம். புதிய சட்டத்தின்கீழ் தொழிலாளர்களுக்கு நலன் மற்றும் சலுகைகளை வழங்க நிறுவனங்களுக்கு செலவு அதிகரித்தாலும் தொழிலாளர்களின் நலன் இந்த புதிய சட்டத்தால் பாதுகாக்கப்படுகிறது என்பது உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

புதிய தொழிலாளர் சட்டம் என்பது, ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் அமலுக்கு வந்த பின் நாட்டில் கொண்டு வரப்பட்டுள்ள மிகப் பெரிய சீர்திருத்தமாகும். இந்நடவடிக்கை இந்தியாவின் வணிகத்தை உலக சந்தையில் பெரிதும் உயர்த்தும்” எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT