வணிகம்

தொழில் மற்றும் வணிக டீசல் விலை லிட்டருக்கு ரூ.17.19 குறைந்தது

செய்திப்பிரிவு

சென்னை: தொழில் மற்றும் வணிக ரீதியான டீசல் விலை லிட்டருக்கு ரூ.17.19 குறைந்துள்ளது.

அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நடைபெறும் போர் காரணமாக ஈரான் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஹார்மூஸ் நீரிணையை முடக்கியது. இதனால் உலக அளவில் எண்ணெய்க் கப்பல்களின் போக்குவரத்து தடைபட்டுள்ளது. மேற்கு ஆசிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வர வேண்டிய கச்சா எண்ணெய், எல்பிஜி ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக நாடு முழுவதும் காஸ் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

          

மேலும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் தொழில் மற்றும் வணிக ரீதியான டீசலின் விலை கடந்த மாதம் 20-ம் தேதி லிட்டருக்கு ரூ.22 அதிகரிக்கப்பட்டது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட்டது. இந்நிலையில் தொழில் மற்றும் வணிகரீதியான டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன.

இதுகுறித்து பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்க தலைவர் கே.பி.முரளி வெளியிட்ட அறிக்கை: தொழில் மற்றும் வணிகப் பயன்பாட்டுக்கான டீசல் விலையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய விலை குறைப்பை நாங்கள் வரவேற்கிறோம். சர்வதேச அரசியல் சூழலால் கடந்த மார்ச் மாதம் ஒரு லிட்டர் ரூ.109.59 என்ற உச்சத்தை எட்டிய இந்த மொத்த விற்பனை டீசல் விலை, தற்போது ஏப்ரல் மாதம் ரூ.92.40 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு லிட்டருக்கு ரூ.17.19 வரை விலை குறைந்துள்ளது.

சென்னையில் தற்போதைய சில்லறை விற்பனை விலை லிட்டருக்கு ரூ.92.48 ஆகவும், தொழில், வணிக டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.40 ஆகவும் உள்ளது. இந்த விரைவான நடவடிக்கை சில்லறை விலை நிலைத்தன்மையை உறுதிப்படுத்தி, தமிழகத்தில் உள்ள பெட்ரோலிய விற்பனையாளர்களுக்கு ஆதரவாக உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT