புதுடெல்லி: கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 29.9 சதவீதம் அதிகரித்து 89.99 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இதன் மூலம், நாட்டின் ஒட்டுமொத்த வர்த்தகப் பற்றாக்குறை 20.09 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 69.27 பில்லியன் டாலராகவும், வர்த்தகப் பற்றாக்குறை 25.15 பில்லியன் டாலராகவும் இருந்தது.
கடந்த அக்டோபரில் ஒட்டு மொத்த இறக்குமதி 94.42 பில்லியன் டாலரிலிருந்து 110.07 பில்லியன் டாலராக அதிகரித்த போதிலும், ஏற்றுமதி வளர்ச்சி வேகமாக இருந்ததால் வர்த்தகப் பற்றாக்குறை கட்டுக்குள் வந்துள்ளது. சரக்கு ஏற்றுமதி 45.06 சதவீதம் வளர்ச்சியடைந்து, வரலாறு காணாத அளவாக 49.47 பில்லியன் டாலரை எட்டியுள்ளது (கடந்த ஆண்டு 34.11 பில்லியன் டாலர்).
அதேசமயம், கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக சரக்கு இறக்குமதி 76.69 பில்லியன் டாலரிலிருந்து 89.35 பில்லியன் டாலராக அதிகரித்ததால், சரக்கு வர்த்தகப் பற்றாக்குறை 39.88 பில்லியன் டாலராக உயர்ந்தது.
ஆனால், சேவைகள் துறை ஏற்றுமதி 35.17 பில்லியன் டாலரிலிருந்து 40.51 பில்லியன் டாலராக அதிகரித்திருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சேவைகள் இறக்குமதி 20.72 பில்லியன் டாலராக மட்டுமே உள்ளதால், சேவைகள் துறையில் கிடைத்த உபரி வருவாய் சரக்கு வர்த்தகப் பற்றாக்குறையை ஈடுகட்டப் பெரிதும் உதவியுள்ளது.