புதுடெல்லி: நடப்பு 2026-27 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி (ஜிடிபி) 7 சதவீதமாக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) கணித்துள்ளது.
அதன் உலகப் பொருளாதார கண்ணோட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சாதகமான மக்கள்தொகை அமைப்பின் வேகம், பரந்து விரிவடையும் உள்நாட்டுச் சந்தை மற்றும் தொடர்ச்சியான கட்டமைப்புச் சீர்திருத்தங்களின் ஆதரவால் இந்தியாவின் வளர்ச்சித் திறன் வலுவடைந்து வருகிறது. தொடர் வளர்ச்சி வேகத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இந்தியாவின் மதிப்பீடுகள் தற்போது உயர்த்தப்பட்டுள்ளன.
அதன்படி, 2026-27 நிதியாண்டுக்கான இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி கடந்த ஜூலையில் அறிவித்த 6.4 சதவீதத்தி்லிருந்து 7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 2027-28 நிதியாண்டுக்கான ஜிடிபி வளர்ச்சியும் 6.7 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா-ஈரான் போர் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் போன்ற புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகள் நிலவியபோதிலும், எரிபொருள் தேவைகளுக்குப் பிற நாடுகளைச் சார்ந்திருக்கும் இந்தியாவுக்கான வளர்ச்சி மதிப்பீடு உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.