

புதுடெல்லி: மிகக் குறைந்த விலையில் ஒட்டு மொத்த உலகத்துக்கும் இந்தியா மருந்துகளை வழங்கி வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த புளூம்பர்க் நிறுவனம் நிதிச் சேவை, மென்பொருள், ஊடகம் என பல்வேறு துறைகளில் கால் பதித்து உள்ளது. இந்த நிறுவனம் சார்பில் கடந்த 2018-ம் ஆண்டில் “புளூம்பர்க் புதிய பொருளாதார மன்றம்” உருவாக்கப்பட்டது. இந்த மன்றத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்பு மாநாடு நடத்தப்படுகிறது. சிங்கப்பூர், பெய்ஜிங் உள்ளிட்ட நகரங்களில் மாநாடு நடைபெறுவது வழக்கம். முதல்முறையாக டெல்லியில் புளூம்பர்க் மாநாடு நேற்று தொடங்கியது. இதில் உலகம் முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்ட பொருளாதார நிபுணர்கள் பங்கேற்று உள்ளனர்.
முதல் நாள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: 21-ம் நூற்றாண்டில் தொழில்நுட்பம், தரவுகள், அறிவு, புதுமை கண்டுபிடிப்புகள் ஆகியவையே ஒரு நாட்டின் பலத்தை தீர்மானிக்கின்றன. இந்த 4 துறைகளிலும் இந்தியா முன்னோடியாக விளங்குகிறது. கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவில் 100 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. தற்போது 2.5 லட்சத்துக்கும் அதிகமான நிறுவனங்கள் செயல்படுகின்றன. சுமார் 45 சதவீத நிறுவனங்களை பெண்கள் தலைமை ஏற்று நடத்துகின்றனர்.
பல்வேறு சமூகநலத் திட்டங்கள் மூலம் நாடு முழுவதும் 25 கோடி பேரை வறுமைக் கோட்டில் இருந்து மீட்டு உள்ளோம். இது மிகப்பெரிய சாதனை ஆகும். மக்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக மானிய நிதி வழங்கப்படுகிறது. இன்றைய உலகத்தில் புதிது, புதிதாக பிரச்சினைகள் உருவாகி வருகின்றன. இதனால் எரிசக்தி, அரியவகை கனிமங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்படுகிறது. இந்த பிரச்சினைகளை இந்தியா திறம்பட சமாளித்து வருகிறது.
நாடு முழுவதும் சூரிய மின் உற்பத்தி கணிசமாக அதிகரித்து வருகிறது. மிகக் குறைந்த விலையில் ஒட்டுமொத்த உலகத்துக்கும் இந்தியா மருந்துகளை வழங்கி வருகிறது. கரோனா காலத்தில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தடுப்பூசிகள், மருந்துகளை விநியோகம் செய்தோம்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதத்தை எட்டி உள்ளது. நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 700 பில்லியன் டாலராக உள்ளது. கடந்த கால தவறுகளை திருத்தி பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களை அமல்படுத்தி வருகிறோம். இதனால் நாட்டின் பொருளாதாரம் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு துறையில் இந்தியா முன்னோடியாக விளங்குகிறது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.