புதுடெல்லி: கடந்த 3 மாதங்களில் சுமார் 50 டன் தங்க நகைகளை இந்தியர்கள் விற்பனை செய்துள்ளனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ.1.8 லட்சத்தை எட்டியது. பின்னர் படிப்படியாக தங்கம் விலை குறைந்து தற்போது 10 கிராம் தங்கம் தோராயமாக ரூ.1.4 லட்சமாக இருக்கிறது. இது ரூ.1.2 லட்சமாக சரியக்கூடும் என்று சந்தை ஆய்வாளர்கள் கணித்து உள்ளனர்.
இதனால் விலை அதிகமாக இருக்கும்போதே தங்கத்தை விற்று நிறைவான லாபம் அடைய இந்தியர்கள் விரும்புகின்றனர். இதன் காரணமாக கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் சுமார் 50 டன் தங்க நகைகளை இந்தியர்கள் விற்பனை செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு இதே காலத்தை ஒப்பிடும்போது பழைய தங்க நகைகள் விற்பனை சுமார் 43% அதிகரித்திருக்கிறது என்று இந்திய புல்லியன் மற்றும் ஜூவல்லர்ஸ் அசோசியேஷன் (ஐபிஜேஏ) தெரிவித்துள்ளது.
ஐபிஜேஇ தேசிய செயலாளர் சுரேந்திர மேத்தா கூறும்போது, “தங்கம் விலை மேலும் குறைந்துவிடுமோ என்ற அச்சத்தால் இந்தியர்கள் பழைய தங்க நகைகளை விற்பனை செய்கின்றனர்" என்றார். இதுகுறித்து பொருளாதார நிபுணர்கள் கூறியதாவது: இந்தியாவின் தங்க தேவையில் 90% வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. நடப்பாண்டில் இதுவரை 72.4 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது.
சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி இந்திய மக்களிடம் சுமார் 30,000 டன் தங்கம் உள்ளது. பழைய தங்கத்தை மக்கள் விற்பனை செய்யும்போது இறக்குமதி கணிசமாக குறையும். இதன்மூலம் அந்நிய செலாவணியை சேமிக்க முடியும். இது நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும்.கடந்த 2025-ல் இந்தியாவில் சுமார் 125 முதல் 150 டன் தங்கம் மறுசுழற்சி செய்யப்பட்டது. நடப்பாண்டில் இது 250 டன்களாக அதிகரிக்கக்கூடும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.