சென்னை: தமிழகத்தில் வணிக ரீதியான எல்பிஜி ஒதுக்கீடு உடனடியாக 70 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இந்திய எண்ணெய் கழகத்தலைவர் ஏ.எஸ்.சஹானி தெரிவித்தார்.
தமிழகத்தில் எரிபொருள் நிலைமை குறித்து, இந்திய எண்ணெய் கழகத் தலைவர் ஏ.எஸ்.சஹானி சென்னையில் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: சுத்திகரிப்பு திறன்கள் ஏறத்தாழ முழு அளவில் இருப்பதால் பெட்ரோல், டீசல், விமானத்துக்கான எரிபொருள் உட்பட திரவ எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் இல்லை.
நாள்தோறும் சுமார் 5 லட்சம் சிலிண்டர்கள் என்ற தமிழகத்தின் சமையல் எரிவாயு தேவையை 100 சதவீதம் பூர்த்தி செய்யும் நிலையில் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் உள்ளன. வீட்டு உபயோக சமையல் எரிவாயுக்கு அதிகபட்ச முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
சில பகுதிகளில் 6 முதல் 8 நாட்கள் வரை காத்திருப்பு காலம் இருப்பதை குறைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் போன்ற அத்தியாவசியப் பகுதிகளுக்கு எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் 100 சதவீதத் தேவைப் பூர்த்தி செய்யப்படுகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 20 நாட்கள் வரை காலதாமதம் தொடர்பாக விரிவானப் பகுப்பாய்வு நடத்தப்பட்டுள்ளது. சனிக்கிழமைக்குள் இத்தகைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும்.
திடீர் சோதனைகள்
பதுக்கல் மற்றும் முறைகேடுகளை தடுக்க மாநில அரசு 10,000-க்கும் அதிகமான திடீர் ஆய்வுகளை மேற்கொண்டது.எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் முன்கூட்டியே அறிவிக்காமல் 1,500-க்கும் அதிகமான திடீர் சோதனைகளை தமிழகம் முழுவதும் மேற்கொண்டுள்ளது.
மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய போதிய கச்சா எண்ணெய் இருப்பில் உள்ளதால், எரிபொருட்கள் வாங்குவது தொடர்பாக மக்கள் பீதியடைய வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.