புதுடெல்லி: இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைத்துள்ளது மத்திய அரசு. இதன்படி ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.13 என இருந்த கலால் வரி ரூ.3 எனவும், ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.10 என இருந்த கலால் வரி பூஜ்ஜியமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக பார்ப்போம்.
அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக உலக நாடுகளில் எரிபொருள் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்து வருகிறது. இந்தச் சூழலில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது.
பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு எண்ணெய் தொழில் மேம்பாட்டு வாரிய வரி, தற்செயல் தேசிய பேரிடர் வரி, கலால் வரி, கூடுதல் கலால் வரி மற்றும் சிறப்பு கூடுதல் கலால் வரி போன்ற வரிகளை விதிக்கிறது. இந்த சூழலில் மேற்காசிய போர் சூழலால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் மீதான எரிபொருளுக்கான கலால் வரியை அரசு குறைத்துள்ளது.
இது தொடர்பாக வியாழக்கிழமை அன்று அரசு வெளியிட்ட அறிவிப்பாணையில் கூறியுள்ளதாவது: பெட்ரோல் மீதான கூடுதல் கலால் வரி (Additional Excise Duty) லிட்டருக்கு ரூ.13-ல் இருந்து ரூ.3 என்றும், டீசல் மீதான கூடுதல் கலால் வரி ரூ.10-ல் இருந்து பூஜ்ஜியமாகவும் குறைக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை குறையுமா? - சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள கூடுதல் செலவினத்தின் ஒரு பகுதியை நுகர்வோர் மீது சுமத்த வேண்டிய கட்டாயம் காரணமாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி உள்ளதாக தனியார் எரிபொருள் விற்பனை நிறுவனமான நயாரா எனர்ஜி தெரிவித்துள்ளது. அந்நிறுவனம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5.30 வரையிலும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 வரையிலும் உயர்த்தி உள்ளது.
இந்த சூழலில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் செலவினத்தை குறைக்கும் வகையில் தற்போது கூடுதல் கலால் வரியை மத்திய அரசு குறைந்துள்ளதாக துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பெட்ரோல், டீசல் விலை இந்திய சந்தையில் குறைய வாய்ப்பில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயத்தில் இந்த கூடுதல் கலால் வரி குறைப்பு நடவடிக்கை மூலம் சில்லறை சந்தையில் பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.