

புதுடெல்லி: நாட்டில் 60 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு உள்ளது. வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: வட மாநிலங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என்று நேற்று முன்தினம் வதந்தி பரவியது. இந்தத் தகவலில் உண்மையில்லை. எனவே, பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். நாட்டில் எங்கும் பெட்ரோல், டீசல் அல்லது எல்பிஜிக்கு பற்றாக்குறை இல்லை. அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களும் போதுமான விநியோகத்துடன் சாதாரணமாக இயங்கி வருகின்றன.
மக்கள் அதிகாரப்பூர்வமான தகவல்களை மட்டுமே நம்புமாறும், வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஒவ்வொரு குடிமகனுக்கும் தடையற்ற எரிசக்தி கிடைப்பதை உறுதி செய்வதில் அரசு உறுதியாக உள்ளது. அனைத்து பெட்ரோல் பங்க் மற்றும் எரிவாயு நிலையங்களிலும் போதிய அளவு இருப்பு உள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கல் இருந்தாலும், உலகின் 41-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து இந்தியா கச்சா எண்ணெயைப் பெற்று வருகிறது. நாட்டில் உள்ள அனைத்து இந்திய சுத்திகரிப்பு நிலையங்களும் 100 % திறனுடன் இயங்கி வருகின்றன. அடுத்த 60 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் விநியோகம் ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டுவிட்டது. இந்தியாவில் 6 நாட்கள் மட்டுமே இருப்பு இருப்பதாகப் பரவும் செய்திகள் தவறானவை.
சமூக வலைதளங்களில் பழைய வீடியோக்களையும், வெளிநாடுகளில் நிலவும் வரிசைகளையும் காட்டி இந்தியாவில் தட்டுப்பாடு நிலவுவதாக வதந்தி பரப்புபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அத்தியாவசியப் பொருட்கள் குறித்து பீதியை ஏற்படுத்துவது குற்றமாகும். பொதுமக்கள் அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.