புதுடெல்லி: இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வது தொடர்பாக, இந்தியா - அமெரிக்கா இடையே டெல்லியில் இன்று முக்கிய பேச்சுவார்த்தை தொடங்குகிறது.
கடந்த ஆண்டு ஜனவரியில் அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு உலக நாடுகளுக்கு அதிக வர்த்தக வரி விதித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். ஆனால், அதிபர் ட்ரம்ப் வரிவிதிப்பு செல்லாது என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பிறகு தனி அதிகாரத்தைப் பயன்படுத்தி 15 சதவீத வரியை உலக நாடுகளுக்கு ட்ரம்ப் விதித்தார்.
ஏற்கெனவே இந்தியாவுக்கு ட்ரம்ப் 18 சதவீத வரி விதித்திருந்தார். இந்த குழப்பமான சூழலில் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா, அமெரிக்கா இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. கடந்த ஏப்ரல் 20 முதல் 23-ம் தேதி வரை அமெரிக்காவில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவின் சிறப்பு வர்த்தகக் குழுவினர் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர். தலைநகர் டெல்லியில் இன்று இருதரப்பு இடையே வர்த்தக பேச்சுவார்த்தை தொடங்குகிறது.
அமெரிக்க குழுவுக்கு பிரெண்ட் லிஞ்சும் இந்தியக் குழுவுக்கு மத்திய வர்த்தகத் துறை கூடுதல் செயலர் தர்பன் ஜெயினும் தலைமை தாங்குகின்றனர். வரும் 4-ம் தேதி வரை பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற உள்ளது. இதுதொடர்பாக இந்தியாவுக்கான அமெரிக்கதூதர் செர்ஜியோ கோர் நேற்று முன்தினம் கூறும்போது, “அமெரிக்கா, இந்தியா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தின் 99 சதவீதப் பணிகள் நிறைவடைந்து விட்டன. ஒரு சதவீதம் மட்டுமே இறுதி செய்யப்பட வேண்டும். ஜூன் 1-ம் தேதி டெல்லியில் தொடங்கும் இரு தரப்பு பேச்சுவார்த்தையில் அந்த ஒரு சதவீதமும் நிறைவு செய்யப்படும்" என்று தெரிவித்தார்.