புதுடெல்லி: இந்தியா, அமெரிக்கா இடையே வாஷிங்டனில் இன்று நடைபெற இருந்த வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரலில் சுமார் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான புதிய வரி விதிதங்களை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த அந்த நாட்டு உச்ச நீதிமன்றம், புதிய வரி விகிதங்களை அண்மையில் ரத்து செய்தது.
15 சதவீதமாக உயர்வு: இதைத் தொடர்ந்து இந்தியா உட்பட அனைத்து நாடுகளுக்கும் அமெரிக்க சட்டத்தின் 122-வது பிரிவின் கீழ் 10 சதவீத வரி விதிக்கப்படும் என்று அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். அடுத்த சில மணி நேரத்தில் வரி விகிதம் 15 சதவீதமாக உயர்த்தப்படுகிறது என்று அவர் உத்தரவிட்டார். அமெரிக்க அரசின் புதிய வரி விகிதம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.
கடந்த ஆண்டு அதிபர் ட்ரம்ப் அமல்படுத்திய வரி விதிப்புக்கு முன்பாக இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அரசு 10 சதவீத வரியை விதித்திருந்தது. எனினும் அமெரிக்காவுக்கு மிகவும் விருப்பமான நாடு என்ற அந்தஸ்து காரணமாக இந்திய பொருட்களுக்கு 3.5 சதவீத வரி மட்டுமே விதிக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரியை அமெரிக்க அரசு விதித்தது.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாக குற்றம்சாட்டி மேலும் 25 சதவீத வரி விதிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்பட்டது. இந்த மாத தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்திய பொருட்கள் மீதான வரி 18 சதவீதமாகக் குறைக்கப்படும் என்று அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.
இது தொடர்பாக இரு நாடுகள் இடையே மார்ச் மாதம் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு முன்னோட்டமாக இந்திய பிரதிநிதிகள், அமெரிக்க பிரதிநிதிகள் இடையே வாஷிங்டனில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது. அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, அதிபர் ட்ரம்பின் 15 சதவீத கூடுதல் வரி விதிப்பு காரணமாக தற்போது குழப்பமான சூழல் நீடிக்கிறது.
இந்திய பொருட்களுக்கு எவ்வளவு வரி விதிக்கப்படும் என்பது தொடர்பாக அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்த சூழலில் இந்தியா, அமெரிக்கா இடையே இன்று நடைபெற இருந்த வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இருதரப்பு பேச்சுவார்த்தைக்கான புதிய தேதி பின்னர் முடிவு செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறும்போது, ”இந்திய பொருட்கள் தொடர்பாக அமெரிக்க அரசு இதுவரை தெளிவான விளக்கம் அளிக்கவில்லை. எனவே குழப்பம் தீரும் வரை இரு தரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை தள்ளிவைக்கப்படலாம்” என்று தெரிவித்துள்ளது.