புதுடெல்லி: அமெரிக்காவில் புதிய வரி விதிப்பு முறை அமலாகும் வரை அந்த நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவும் அமெரிக்காவும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. இதில் இந்தியாவுக்கு 18% வரி விதிக்கப்படும் என உடன்பாடு எட்டப்பட்டது. எனினும் இது தொடர்பான ஒப்பந்தம் மார்ச் மாதத்தில் கையெழுத்தாகும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், உலக நாடுகளுக்கு அதிபர் ட்ரம்ப் தன்னிச்சையாக வரி விதித்தது செல்லாது என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
இருப்பினும், சில மணி நேரங்களுக்குப் பிறகு, வர்த்தக சட்டத்தின் 122-வது பிரிவின்படி, 10 சதவீத வரி விதிப்பதாக ட்ரம்ப் அறிவித்தார். பின்னர் இந்த வரியை 15 சதவீதமாக உயர்த்தினார். இந்த வரி விதிப்பை 150 நாட்களுக்கு மட்டுமே அமல்படுத்த முடியும். இதையடுத்து, திட்டமிட்டபடி அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாவது நிறுத்திவைக்கப் பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் புதிய வரி விதிப்புக் கட்டமைப்பு நடைமுறைக்கு வந்த பின்னரே இந்தியா- அமெரிக்கா இடையிலான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று வர்த்தக துறைச் செயலாளர் ராஜேஷ் அகர்வால் நேற்று தெரிவித்தார்.