புதுடெல்லி: உலகளவில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக பெட்ரோல் பங்க்குகள் அதிகம் உள்ள மூன்றாவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
இந்தியாவில் சில்லரை விற்பனை பெட்ரோல் பங்க்குகள் நெட்வொர்க் கடந்த 10 ஆண்டுகளில் 2 மடங்காக அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. தற்போது ஒரு லட்சம் பெட்ரோல் பங்க்குகள் என்ற எண்ணிக்கை இந்தியா தாண்டி உள்ளது.
இதன் மூலம் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக உலகளவில் பெட்ரோல் பங்க்குகள் அதிகம் உள்ள 3-வது நாடு என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.
அமெரிக்காவில் ஒன்றரை லட்சத்துக்கு மேற்பட்ட பெட்ரோல் பங்க்குகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல் சீனாவில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்க்குகள் உள்ளன. இந்தியாவில் தற்போது ஒரு லட்சத்து 266 பெட்ரோல் பங்க்குகள் உள்ளன.
இதுகுறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் முன்னாள் தலைவர் பி.அசோக் கூறும்போது, ‘‘கிராமப்புறங்களிலும் நிறைய பெட்ரோல் பங்க்குகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. அத்துடன், போட்டிகள் அதிகரிப்பால் நுகர்வோர் சேவையும் மேம்பட்டுள்ளது’’ என்றார்.
இந்தியாவில் உள்ள மொத்த பெட்ரோல் பங்க்குகளில், 29 சதவீதம் கிராமப்புறங்களில் உள்ளன. இந்த எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் 22 சதவீதமாக இருந்தது. பெட்ரோல் பங்க் துறையில் தனியார் பங்கு 10 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நாடு முழுவதும் 2,100 பங்க்குகளை இயக்குகிறது. நயாரா எனர்ஜி 6,900 பங்க்குகளை நிர்வகிக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் பெட்ரோல் நுகர்வு 110 சதவீதம் அதிகரித்துள்ளது. டீசலின் நுகர்வு 32 சதவீதம் உயர்ந்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.