ஈரானிய கச்சா எண்ணெய்யுடன் 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா நோக்கி வந்த ‘பிங் ஷுன்’ டேங்கர் கப்பல்.
புதுடெல்லி: கடந்த 7 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ஈரானிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி உள்ளது.
உலகின் 3-வது பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் நுகர்வு நாடாக இந்தியா விளங்குகிறது. இந்நிலையில், அணு ஆயுதங்களை தயாரிப்பதாகக் கூறி ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. அமெரிக்காவின் இந்த அழுத்தம் காரணமாக, மே 2019-க்குப் பிறகு ஈரானிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கவில்லை.
இந்த சூழலில் மேற்கு ஆசிய போர் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் ஏற்றிய சரக்குக் கப்பல்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உலகம் முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டு விலையும் உயர்ந்துள்ளது.
இதையடுத்து, ஈரானிய எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பொருட்கள் மீதான தடைகளை அமெரிக்கா தற்காலிகமாக நீக்கியது. இந்நிலையில், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் 7 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.
இது குறித்து மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சகம் தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியுள்ளதாவது: ஈரானில் இருந்து குஜராத் மாநிலம் வாடினார் நோக்கி வந்த கச்சா எண்ணெய் கப்பல் பணம் செலுத்துவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக சீனாவுக்குத் திருப்பி விடப்பட்டதாக பரப்பப்படும் செய்திகளும், சமூக ஊடகப் பதிவுகளும் உண்மைக்குப் புறம்பானவை. 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்கிறது.
வணிக ரீதியான பரிசீலனைகளின் அடிப்படையில், பல்வேறு இடங்கள் மற்றும் புவியியல் பகுதிகளில் இருந்து எண்ணெய் பெற நிறுவனங்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் விநியோகத் தடைகள் ஏற்பட்டபோதிலும், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஈரான் உட்பட பல இடங்களில் இருந்து தங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய்யை பெற்று உறுதி செய்துள்ளன. வதந்திகளுக்கு மாறாக, ஈரானிய கச்சா எண்ணெய் இறக்குமதியில் பணம் செலுத்த எந்த தடையும் இல்லை.
கப்பல் திசைதிருப்பப் பட்டதாகக் கூறப்படும் புகார்கள், எண்ணெய் வர்த்தகம் எவ்வாறு இயங்குகிறது என்பதை கருத்தில் கொள்ளவில்லை. ‘பில்ஸ் ஆஃப் லேடிங்' (Bills of Lading) எனப்படும் சரக்கு ஆவணங்கள் பெரும்பாலும் ஒரு உத்தேசமான இறங்கு துறைமுகத்தையே குறிப்பிடுகின்றன. ஆனால் கடல் பயணத்தின்போது, வர்த்தக லாபம் மற்றும் செயல்பாட்டு நெகிழ்வுத்தன்மையின் அடிப்படையில் சரக்கின் இலக்கு மாற்றப்படலாம்.
வரும் மாதங்களுக்கான இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவைகள் முழுமையாகப் பாதுகாப்பான முறையில் உறுதி செய்யப்பட்டுள்ளன என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்படுகிறது. சமையல் எரிவாயு (எல்பிஜி) தொடர்பான சில புகார்களும் தவறானவை. சுமார் 44 ஆயிரம் மெட்ரிக் டன் ஈரானிய எல்பிஜியை சுமந்து வந்த ‘சீ பேர்டு' என்ற கப்பல் ஏப்.2-ம் தேதி இந்தியாவின் மங்களூர் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்து, தற்போது சரக்குகளை இறக்கி வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஈரானிய கச்சா எண்ணெய்யுடன் இந்தியா நோக்கி வந்த ‘பிங் ஷுன்’ என்ற டேங்கர் கப்பல், குஜராத்தை நெருங்கிய பிறகு சீனா நோக்கி பாதையை மாற்றியதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. மத்திய அரசு அந்த தகவலை மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.