ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டம் சப்பாணிப்பட்டியில் உள்ள ஆலையில் ஏற்றுமதி செய்ய முடியாமல் தேங்கியுள்ள மாங்கூழ்.
கிருஷ்ணகிரி: ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் தாக்குதல் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத் தில் மாங்கூழ் ஏற்றுமதி பாதிக்கப் பட்டுள்ளது.
இதனால், ரூ.2,000 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்தனர். மேலும், மத்திய, மாநில அரசுகள் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 35 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு அறுவடையாகும் தோத்தபுரி எனப்படும் பெங்களூரா, அல்போன்சா ரகத்தில் இருந்து மாங்கூழ் தயாரிக்கப்பட்டு உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் 3 லட்சத்து 52 ஆயிரத்து 436 மெட்ரிக் டன் மா உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், 2.10 லட்சம் மெட்ரிக் டன் மாம்பழம் மாங்கூழ் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 23 மாங்கூழ் ஆலைகள் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் இரு ஆலைகள் உள்ளன.
இங்கு தயாரிக்கப்படும் மாங்கூழ் அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, ரஷ்யா, சீனா மற்றும் வளைகுடா நாடுகளான துபாய், சவுதி அரேபியா, குவைத் உள்ளிட்ட நாடுகளுக்கு 3 லட்சம் டன்னும், உள்நாட்டில் 2 லட்சம் டன்னும் விற்பனை செய்யப்படுகிறது.
ஏற்றுமதி மூலம் ஆண்டுக்கு ரூ.3,500 கோடி அந்நியச் செலாவணியும், உள்நாட்டு வர்த்தகம் மூலம் ரூ.15,000 கோடியும் கிடைக்கிறது. இந்நிலையில், ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதால் ஏற்றுமதி செய்யப்பட மாங்கூழ் தேக்கம் அடைந்து ரூ.2,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட மாங்கூழ் உற்பத்தியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பையூர் மாதவன் கூறியதாவது: ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வெளிநாடுகளுக்கு மாங்கூழ் ஏற்றுமதியாகும். குறிப்பாக வளைகுடா நாடுகளில் பழச்சாறு தேவை அதிகம் இருக்கும்.
இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக ரஷ்யா-உக்ரைன், இஸ்ரேல்-பாலீஸ்தீன் போர் மற்றும் செங்கடல் பிரச்சினையால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது, ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் தாக்குதல் தீவிரமடைந்திருப்பதால், மாங்கூழ் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு, இலங்கை, சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்கள் மற்றும் மாங்கூழ் ஆலைகளில் பல லட்சம் டன் மாங்கூழ் தேக்கம் அடைந்து உள்ளதால், ரூ.2,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டு உள்ளது.
மேலும், போர் காரணமாக ஒரு கன்டெய்னருக்கு 2,000 டாலர் போர் அபாயக் கூடுதல் கட்டணமாக வழங்க வேண்டும் என சர்வதேச வர்த்தக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால், மாங்கூழ் விற்பனை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், மா கொள்முதல் செய்த விவசாயிகளுக்கு கொள்முதல் தொகை வழங்குவதிலும், தொழிலாளர் களுக்கு ஊதியம், மின்கட்டணம், வங்கிக் கடன் செலுத்தவும் மிகுந்த சிரமத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே, பல நாடுகளில் மா உற்பத்தியும், மாங்கூழ் உற்பத்தியும் அதிகரித்துள்ள நிலையில், ஆண்டுதோறும் ஏற்றுமதி சரிந்து வருகிறது.
எனவே, மாங்கூழ் உற்பத்தியாளர் களுக்கு மத்திய, மாநில அரசுகள் ஒரு டன்னுக்கு ரூ.2,000 இழப்பீடு வழங்க வேண்டும். வங்கிகளில் பெற்றுள்ள கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். ஜிஎஸ்டி விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.