புதுடெல்லி: இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.2.31 லட்சம் கோடியைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது: கடந்த 2025 அக்டோபரில் ரூ.1,88,125 கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல், இந்த ஆண்டு அக்டோபரில் ரூ.2,31,290 கோடியாக அதிகரித்துள்ளது.
கடந்த 2017-ல் ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்ட பிறகு வசூலான 2-வது அதிகபட்ச தொகை இது. நடப்பாண்டு ஏப்ரலில் வசூலான ரூ.2.42 லட்சம் கோடிக்கு அடுத்தபடியாக இதுவே அதிகபட்ச வசூலாக உள்ளது.
இறக்குமதி சார்ந்த ஜிஎஸ்டி வசூல் 42.2% அதிகரித்து ரூ.72,246 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவே மொத்த வசூல் கணிசமாக உயர முதன்மை காரணமாகும். உள்நாட்டு வணிகப் பரிவர்த்தனைகள் மூலம் கிடைத்த ஜிஎஸ்டி வசூல் 15.8% உயர்ந்து ரூ.1,59,044 கோடியை எட்டியுள்ளது.
ரூ.27,934 கோடி வரித் திரும்பப் பெறுதலுக்குப் பிறகு, அக்டோபர் மாதத்தின் நிகர ஜிஎஸ்டி வசூல் ரூ.2,03,356 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டை விட 25.6% அதிகம். கடந்தாண்டை விட இந்த ஆண்டு அக்டோபரில் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வசூலானது 22.9% உயர்ந்துள்ளது. கடந்த 2017 ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு பதிவான இரண்டாவது அதிகபட்ச மாதாந்திர வசூல் இதுவாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அக்டோபரில் பண்டிகைக் கால விற்பனை அதிகரித்ததன் காரணமாகவே ஜிஎஸ்டி வசூல் ரூ.2 லட்சம் கோடி என்ற வரலாற்று இலக்கைத் தாண்டியுள்ளது.