சென்னை: தமிழகத்தில் உணவுத் துறையை மேம்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: உணவுத் துறையை உண்மையான பொருளாதார வளர்ச்சிக்கான இயந்திரமாக உலகம் அங்கீகரிக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும். அதற்கு நிதியுதவி, பணியாளர்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உணவுத்துறை விரிவாக்கம் ஆகியவை தேவைப்படுகிறது. மக்களால் அதிகம் விரும்பப்படும் உணவு நிறுவனங்களை கூட சிலர் ஏளனம் செய்கின்றனர். இந்நிலையை மாற்றும் வகையில், தற்போது கோவையில் சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
அவை வளர்ச்சி மிகுந்த தொழில்துறை அளவிலான உணவு உற்பத்தி, குளிர்பதனச் சங்கிலிகள், ஏற்றுமதி, உணவு விற்பனையில் உலகளாவிய சில்லறை வணிக விரிவாக்கம் மற்றும் ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளுக் கான ஒப்பந்தங்களாகும்.
நம் மாநிலத்தில் உள்ள நிறுவனங்கள்தான் நமக்கு உணவளிக்கின்றன, வேலைவாய்ப்பைத் தருகின்றன. தமிழகத்தின் அடையாளத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்கின்றன. அவர்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதி மற்றும் ஏற்றுமதி செய்வதற்கு ஆதரவு தர வேண்டும். நம் மாநில உணவு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு துணையாக இருப்பதே வலுவான தமிழகத்தை கட்டமைக்கும். எனவே, ஒட்டு மொத்த உணவுத் துறைக்கும் உதவ கூடுதலாக உழைப்போம். நமது மாநில நிறுவனங்களின் வளர்ச்சிக்கான இன்னும் பல்வேறு திட்டங்கள் வரவுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.