கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை
புதுடெல்லி: கூகுள் நிறுவனம் தனது சிஇஓ சுந்தர் பிச்சையின் மொத்த சம்பளத்தை அடுத்த 3 ஆண்டுகளுக்கு ரூ.6 ஆயிரத்து 300 கோடியாக உயர்த்தியுள்ளது.
அமெரிக்காவின் ஆல்பபெட் குழுமத்தின் துணை நிறுவனம் கூகுள். இந்நிறுவனத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை கடந்த 2004-ல் சேர்ந்தார். க்ரோம் மற்றும் ஆன்ட்ராய்ட் உருவாக்கத்தில் இவர் முக்கிய பங்காற்றினார். இதையடுத்து கடந்த 2015-ல் கூகுள் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) ஆனார். இவர் சிஇஓ ஆனதிலிருந்து கூகுள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 535 பில்லியன் டாலரில் இருந்து 3.6 டிரில்லியனாக உயர்ந்தது.
இந்நிலையில், சுந்தர் பிச்சையின் மொத்த சம்பளத்தை அடுத்த 3 ஆண்டுகளுக்கு 692 மில்லியன் டாலராக (ரூ.6,300 கோடி) கூகுள் நிறுவனம் உயர்த்தியுள்ளது. இந்த ஊதியத் தொகுப்பின் பெரும்பகுதி 126 மில்லியன் டாலர் மதிப்புள்ள ‘செயல்திறன் பங்கு யூனிட்' (PSU) மூலம் கிடைக்கிறது.
இதன் மூலம் உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் சிஇஓ என்ற பெருமையை சுந்தர் பிச்சை பெற்றுள்ளார். மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாதெல்லா 96.5 மில்லியன் டாலர் சம்பளம் பெறுகிறார். ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் குக் சம்பளம் 74.3 மில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் 9.8 மில்லியன் டாலர் மதிப்புள்ள 32,500 பங்குகளை சுந்தர் பிச்சை விற்றார். தற்போது இவரும், இவரது மனைவியும் சுமார் 498 மில்லியன் டாலர் மதிப்புள்ள 1.67 மில்லியன் கூகுள் பங்குகளை வைத்துள்ளனர்.