படம்: மெட்டா ஏஐ. 
வணிகம்

ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,240 உயர்ந்த தங்கம் விலை

அனலி

சென்னை: சென்னையில் இன்று (ஆகஸ்ட் 5) ஒரே நாளில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை காலை, மாலை என இருமுறை உயர்ந்துள்ளது. மாலை நிலவரப்படி பவுனுக்கு ரூ.2,240 உயர்ந்து விற்பனையாகிறது.

சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,360-க்கும், பவுனுக்கு ரூ.1,280 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,06,880-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், மாலையில் மீண்டும் விலை ஏற்றம் கண்டது. அதன்படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு மேலும் ரூ.120 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,480-க்கும், கிராமுக்கு ரூ.960 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,07,840-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை காலையில் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.240-க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.2,40,000-க்கும் விற்பனையானது. அதே விலையே இப்போதும் தொடர்கிறது.

விலையேற்றம் பின்னணி:

சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதலின் தாக்கம் உலக பொருளாதாரத்தில் எதிரொலித்து வருகிறது. அது சர்வதேச அளவில் தங்கம் விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மே மாதம் தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. அதையடுத்து தங்கம் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. நேற்று (செவ்வாய்க்கிழமை) தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 என குறைந்திருந்தது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்துள்ளது.

SCROLL FOR NEXT