சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதாவது, (டிச.15) இன்று பிற்பகலில் ஒரு கிராம் தங்கம் ரூ.12,515-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்தைக் கடந்தும், விற்பனை செய்யப்படுகிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கம் விலை ஒரு பவுன் ரூ.1 லட்சத்தை எட்டும் என்று கணிக்கப்பட்ட நிலையில் இன்று அந்த கணிப்பு பலித்துள்ளது.
காரணம் என்ன? தங்கத்தின் விலை நாளுக்கு நாள் விண்ணைத் தொடும் அளவுக்கு அதிகரித்து வருகிறது. சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவின் தாக்கத்தால், தங்கம் விலை உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், 22 காரட் தங்கத்தின் விலை இன்று காலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,460-க்கும், பவுனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு பவுன் ரூ.99,680-க்கும் விற்பனையானது. மேலும், 24 காரட் தங்கம் ஒரு பவுன் ரூ.1,08,744 மற்றும் 18 காரட் தங்கம் ஒரு பவுன் ரூ.83,200-க்கும் விற்பனையானது.
இதனைத் தொடர்ந்து, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மற்றுமொரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதாவது, பிற்பகலில் ஒரு கிராம் தங்கம் ரூ.12,515-க்கும், ஒரு பவுன் ரூ.1,00,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
காலையில் கிராம் ஒன்றுக்கு 90 ரூபாய் அதிகரித்து ஒரு பவுன் 720 ரூபாய் அதிகரித்த நிலையில், தற்போது பவுனுக்கு ரூ.440 அதிகரித்து, ஒரு பவுன் தங்கம் ரூ.1,00,120-க்கு விற்பனையாகிறது. தற்போது ஒரு கிராம் வெள்ளி ரூ. 215-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 2,15,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.