சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றும் உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒரே நாளில் பவுனுக்கு ரூ.3,600 உயர்ந்து ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 200-க்கு விற்பனையானது. இதேபோல, வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.22 ஆயிரம் உயர்ந்துள்ளது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, சர்வதேச அரசியல் சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த டிசம்பர் 15-ம் தேதி ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.1 லட்சத்து 120-க்கு விற்கப்பட்டது. பின்னர் தங்கம் விலை படிப்படியாக உயர்ந்தது.
குறிப்பாக, டிச. 27-ம் தேதி ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 800-ஆக உயர்ந்து, வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. பின்னர் தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவின. கடந்த 13-ம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை பவுன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 360-ஆகவும், 14-ம் தேதி ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 240 ஆகவும் அடுத்தடுத்து உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்துஉள்ளது.
இதையடுத்து, மீண்டும் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்தது. நேற்று முன்தினம் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 600-ஆக உயர்ந்துபுதிய உச்சத்தை தொட்டது. இதன் தொடர்ச்சியாக, ஆபரணத் தங்கம் நேற்றும் வரலாறு காணாத அளவுக்கு விலை உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டது. ஒரே நாளில்
பவுனுக்கு ரூ.3,600 உயர்ந்து, ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 200-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.450 உயர்ந்து ரூ.13,900-க்கு விற்பனையானது.
இதேபோல, 24 காரட் சுத்த தங்கம் ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்து 312-க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு ரூ.22 உயர்ந்து ரூ.340-க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.22 ஆயிரம் உயர்ந்து ரூ.3 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் பெரிதும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து தங்க நகை வியாபாரிகள் கூறும்போது, “சர்வதேச அளவில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார காரணங்களால் தங்கம் விலை உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை இன்னும் உயருமா அல்லது குறையுமா என்பது குறித்து தற்போது எதுவும் கூற முடியாது. சர்வதேச அளவிலான பொருளாதார சூழ்நிலைகளைப் பொறுத்து தான் தங்கம் விலையில் மாற்றங்கள் இருக்கும்” என்றனர்.