சென்னை: சென்னையில் தங்கம் நேற்று மீண்டும் ரூ.96 ஆயிரத்தை தாண்டியது. பவுனுக்கு ரூ.720 உயர்ந்து, ரூ.96,560-க்கு விற்பனையானது. ஒரு கிராம் ரூ.90 உயர்ந்து, ரூ.12,070-க்கு விற்கப்பட்டது. கடந்த 8 நாட்களில் பவுனுக்கு ரூ.4,400 வரை உயர்ந்துள்ளது. 24 காரட் ரூ.1,05,336 ஆக இருந்தது.
இதுபோல, வெள்ளி கிராமுக்கு ரூ.4 உயர்ந்து, ரூ.196 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.4,000 அதிகரித்து, ரூ,1.96 லட்சமாகவும் இருந்தது.
தங்கம் விலை உயர்வு குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் சாந்தக்குமார் கூறுகையில், “அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரிப்பு ஆகியவை தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கியக்காரணங்களாக உள்ளன. மேலும், வரும் நாட்களில் தங்கம் விலை உயரவே வாய்ப்பு உள்ளது” என்றார்.