பட்ஜெட்டில் ஜிடிபி கடன் விகிதம் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: 2025-26-ல் திருத்தியமைக்கப்பட்ட மதிப்பீட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 56.1 சதவீதமாக இருந்த உற்பத்தி-கடன் விகிதம், 2026-27 பட்ஜெட் மதிப்பீட்டில் 55.6 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது 2030-31-ல் 50சதவீதமாக குறையும். உற்பத்தி-கடன் விகிதத்தை குறைத்து, வட்டி செலுத்துதல்களுக்கான செலவைக் குறைப்பதன் மூலம் முன்னுரிமைத் துறை செலவினங்களுக்கான நிதிகள் படிப்படியாக அதிகரிக்கும்.
2025-26-ம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறையை 4.5 சதவீதத்திற்கும் கீழ் குறைக்க 2021-22 நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட உறுதிமொழி நிறைவேற்றப்பட்டுள்ளது. 2025-26-ம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்ட மதிப்பீட்டில், நிதிப் பற்றாக்குறை 2025-26-ம் ஆண்டின் பட்ஜெட் மதிப்பீட்டுக்கு இணையாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. கடன் ஒருங்கிணைப்பின் புதிய நிதி விவேகப் பாதைக்கு ஏற்ப, 2026-27-ம் ஆண்டு பட்ஜெட் மதிப்பீட்டில் நிதிப் பற்றாக்குறை ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.3 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடன் அல்லாத வரவுகளின் திருத்தியமைக்கப்பட்ட மதிப்பீடு, ரூ.34 லட்சம் கோடி. இதில் மத்திய அரசின் நிகர வரி வரவுகள் ரூ.26.7 லட்சம் கோடி. மொத்த செலவினங்களின் திருத்தியமைக்கப்பட்ட மதிப்பீடு ரூ.49.6 லட்சம் கோடி. இதில் மூலதனச் செலவு சுமார் ரூ.11 லட்சம் கோடி. இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.