மஸ்கட்: இந்திய சரக்குக் கப்பல் உட்பட 4 கப்பல்கள் புதிய வழித்தடம் மூலம் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்துள்ளன.
ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் மூடியது. நட்பு நாடுகளின் கப்பல்கள் மட்டும் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து செல்ல ஈரான் அனுமதிக்கிறது. மற்ற நாடுகளின் கச்சா எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முயன்றால் அதன் மீது தாக்குல் நடத்தப்படுகிறது. இதனால் உலகம் முழுவதும் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியக் கப்பல் உட்பட 4 கப்பல்கள் ஓமன் கடல் எல்லைக்குள் புதிய வழியில் சென்று ஹார்முஸ் ஜலசந்தியை கடந்துள்ளன. இந்த புதிய வழித்தடம் மூலம், சர்வதேசக் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடப்பதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது போல் தெரிகிறது.
தானியங்கி அடையாள கருவிகள் (ஏஐஎஸ்) மற்றும் தொலை உணர்வு தரவு கருவிகள் மூலம் ஆய்வு செய்ததில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றி வந்த 4 கப்பல்கள், சர்வதேச கடல் வழியை தவிர்த்து, புதிய வழித்தடத்தில் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்துள்ளன.
ஹப்ரட் மற்றும் தல்குத் என்ற 2 மார்ஷல் தீவு கப்பல்கள், சோகர் என்ற பனாமா நாட்டு காஸ் டேங்கர் கப்பல் ஆகியவை ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமா நகருக்கு அருகே ஓமன் கடல் பகுதியில் நுழைந்தன. அதன்பின் முசாண்டம் தீபகற்ப பகுதி அருகே கப்பலின் சிக்னல் டிரான்ஸ்பாண்டர்கள் அணைக்கப்பட்டன. மஸ்கட்டில் இருந்து 350 கி.மீ தூரத்தை எட்டிய பிறகே கப்பலின் சிக்னல் டிரான்ஸ்பாண்டர்கள் கடந்த 3-ம் தேதி ஆன் செய்யப்பட்டன. இந்த இரு கப்பல்களிலும் 20 லட்சம் பீப்பாய் சவுதி மற்றும் ஐக்கி அரபு எமிரேட் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்பட்டன.
இதேபோல் சோகர் கப்பலும் கடந்த மாதம் 21-ம் தேதி புதிய வழித்தடத்தில் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்துள்ளது. இதைத் தொடர்ந்து எம்எஸ்வி க்யூபா என்ற இந்தியக் கப்பலும் கடந்த மாதம் 31-ம் தேதி துபாயில் இருந்து புறப்பட்டு ஹார்முஸ் ஜலசந்தியை புதிய வழித்தடத்தில் கடந்துள்ளது. இதன்மூலம் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க ஈரான் வழித்தடத்தை பயன்படுத்தாமல், மாற்று வழி உருவாக்கப்பட்டுள்ளது.