பிரசித்திபெற்ற கொடைக்கானல் மலைப்பூண்டு.
பழநி: தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 63-வது மலர் கண்காட்சியையொட்டி, பூண்டு கண்காட்சியும் நடத்தப்பட உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூண்டி, கவுஞ்சி, பூம்பாறை, கூக்கால், பழம்புத்தூர், கிளாவரை உள்ளிட்ட பகுதிகளில் 900 ஹெக்டேர் பரப்பளவில் மலைப்பூண்டு சாகுபடி செய்யப்படுகிறது.
இந்த மலைப்பூண்டு பாரம்பரிய வகை மற்றும் அதிக மருத்துவத் தன்மை கொண்டது. அதனால் கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது.
பயிரிட்ட 120 நாட்களில் மலைப்பூண்டு அறுவடைக்கு வரும். கொடைக்கானல் மலைப்பகுதியில் விளையும் பூண்டு சாம்பல் நிறத்தில் காணப்படும். இதில் காரத்தன்மையும் அதிகம்.
புகை மூட்டம் செய்து பதப்படுத்தி வைத்தால் ஓராண்டு வரை கெடாமல் இருக்கும். கொடைக்கானல் மலைப்பூண்டு உட்பட நாடு முழுவதும் உள்ள பல வகையான பூண்டு, பூண்டின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் கண்காட்சி மற்றும் பயிற்சிப் பட்டறை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
பிரையன்ட் பூங்காவில் மே மாதம் 63-வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா நடைபெற உள்ளது. மலர் கண்காட்சியை பார்க்க தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருவர்.
அந்த சமயத்தில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பயனடையும் வகையில் பூண்டு கண்காட்சி நடத்த இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகம் அனுமதி அளித்துள்ளது.
இதன்படி, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கொடைக்கானல் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் இணைந்து நடப்பாண்டு மலர் கண்காட்சியையொட்டி, தமிழகத்தில் முதன்முறையாக பூண்டு கண்காட்சி மற்றும் பயிற்சி பட்டறை நடத்தப்பட உள்ளது.
இதில், நாடு முழுவதும் உள்ள பூண்டு ரகங்களை காட்சிப்படுத்துதல், தரமான பூண்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி குறித்தும், பூண்டில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயார் செய்வது குறித்தும் பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.