சென்னை: அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக உள்நாட்டு, சர்வதேச விமான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக, எரி பொருட்களின் விலை, பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, விமானங்களுக்கு பயன்படுத்தும் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்கள், பயணிகளுக்கான விமான டிக்கெட் கட்டணங்களை உயர்த்தியுள்ளன. இந்த கட்டண உயர்வு இன்று (8ம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது.
ஏற்கெனவே, கடந்த மார்ச் 12-ம் தேதி விமான டிக்கெட் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில், 2-வது முறையாக கட்டண உயர்வால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம், உள்நாட்டு விமான கட்டணங்களை 25 சதவீதத்துக்கு மேல் உயர்த்த கூடாது என்று கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எனவே, உள்நாட்டு விமான பயணங்களுக்கு கட்டண உயர்வு ரூ.299 முதல், ரூ.899 வரை அதிகரித்துள்ளது.
அதன்படி, முதல் 500 கிலோ மீட்டர் வரை ரூ.299, 501-ல் இருந்து 1,000 கிலோ மீட்டர் வரை ரூ.399, 1,001 முதல் 1,500 கிலோ மீட்டர் வரை ரூ.549, 1,501 முதல் 2,000 கிலோ மீட்டர் வரை ரூ.749, 2,000 கிலோ மீட்டருக்கு மேல் ரூ.899 என கட்டணம் உயர்ந்துள்ளது.
சர்வதேச விமானங்களுக்கான கட்டண உயர்வுக்கு, சிவில் விமான போக்குவரத்துத் துறை கட்டுப்பாடு எதுவும் விதிக்காததால், சர்வதேச விமான கட்டணங்கள் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளன. சார்க் நாடுகளுக்கு (வங்கதேசம் தவிர) விமான கட்டணங்கள் (24 அமெரிக்க டாலர்) ரூ.1,992 உயர்த்தப்பட்டுள்ளது. மேற்காசியா, மத்திய கிழக்கு நாடுகளுக்கு (50 அமெரிக்க டாலர்) ரூ.4,150, சீனா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு (சிங்கப்பூர் தவிர) (100 அமெரிக்க டாலர்) ரூ.8,300 கட்டணம் உயர்ந்துள்ளது.
ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா நாடுகளுக்கான கட்டண உயர்வு வரும் 10ம் தேதி அதிகாலை முதல் அமலுக்கு வருகிறது. ஐரோப்பிய நாடுகளுக்கு (205 அமெரிக்க டாலர்) ரூ.17,015, வட அமெரிக்க நாடுகளுக்கு (280 அமெரிக்க டாலர்) ரூ.23,240, ஆஸ்திரேலியா நாட்டுக்கு (280 அமெரிக்க டாலர்) ரூ.23,240 கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
பயண தேதி, இடம் வங்கதேசம், சிங்கப்பூர், ஜப்பான், ஹாங்காங், தென்கொரியா உள்ளிட்ட பகுதிகளுக்கான கட்டண உயர்வுகள் பின்னர் அறிவிக்கப்படவுள்ளன. ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் பயணிக்க, முன்னதாகவே டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து இருந்த பயணிகளுக்கு, இந்த கட்டண உயர்வு பொருந்தாது. அவர்கள் பழைய கட்டண டிக்கெட்களில் பயணிக்கலாம். ஆனால் பயண தேதி, அல்லது பயணம் செய்யும் இடங்களை மாற்றினால், புதிய கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.