மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
புதுடெல்லி: “மத்திய அரசு அளவுக்கு அதிகமாக கடன் வாங்கவில்லை. கடன் அளவு கட்டுக்குள் உள்ளது” என்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
இதுதொடர்பாக மாநிலங்களவையில் இன்று அவர் பேசியது: “நாட்டின் பொருளாதாரம் வலுவாக இருக்கிறது. பணவீக்கம் குறைந்து வருகிறது. அபரிதமான பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. பொதுமக்கள் செலுத்தும் வரிப் பணத்தை மிகுந்த பொறுப்புடன் செலவிட்டு வருகிறோம். இதனால், நிதிப் பற்றாக்குறை குறைந்திருக்கிறது.
தனிநபர் வருமான வரி வசூல் கணிசமாக உயர்ந்துள்ளது. நடுத்தர வர்க்க மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வரி வசூல் அதிகரித்து வருகிறது. நடுத்தர வர்க்க மக்கள் மீது வரி சுமைகள் சுமத்தப்படவில்லை. நாட்டின் கடன் சுமை அதிகரித்து வருவதாக காங்கிரஸ் கட்சி முதலைக் கண்ணீர் வடிக்கிறது. அளவுக்கு அதிகமாக மத்திய அரசு கடன் வாங்கவில்லை. கடன் அளவு கட்டுக்குள் உள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்களுக்காக மக்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.48 லட்சம் கோடி நேரடியாக செலுத்தப்பட்டு உள்ளது. இதன்மூலம் சுமார் ரூ.4.31 லட்சம் கோடி பணம் ஊழலில் வீணாவது தடுக்கப்பட்டு உள்ளது. கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் காலத்தில் வேலைவாய்ப்பின்மை சதவீதம் அதிகமாக இருந்தது. தேசிய ஜனநாயக கூட்டணியில் வேலைவாய்ப்புகள் பெருகி வருகின்றன.
மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசுகள் முழுமையாக நிறைவேற்ற வேண்டும். இதன்மூலம் மாநிலங்களும், அந்த மாநிலங்களின் மக்களும் நிறைவான பலன்களை அடைவார்கள்” என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.