வணிகம்

ஈஷா வழிகாட்டுதலில் இயங்கும் 3 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு தேசிய விருது

செய்திப்பிரிவு

கோவை: சத்குருவின் ஈஷா அவுட்ரீச் வழிகாட்டுதலில் இயங்கும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தொடர்ந்து 4-வது ஆண்டாக தேசிய விருதுகளை வென்றுள்ளன.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை: இந்தியத் தொழில் கூட்டமைப்பின் (CII) ‘உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான சிறப்பு விருதுகள் 2026’ வழங்கும் விழா டெல்லியில் இன்று (அக்.30) நடைபெற்றது. இதில் ஈஷாவின் வழிகாட்டுதலின் கீழ் இயங்கும் 3 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு தேசிய அளவில் விருதுகள் கிடைத்துள்ளன.

கோயம்புத்தூரைச் சேர்ந்த தென்சேரிமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், சந்தைப்படுத்துதலில் இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதேபோல், கோவை சென்னியாண்டவர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், சந்தைப்படுத்துதலில் இந்திய அளவில் சிறப்பு அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

இவற்றுடன் கர்நாடக மாநிலம் குடகில் செயல்படும் பொன்னாட் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மையில் அகில இந்திய அளவில் முதலிடத்துக்கான தேசிய விருதை வென்றுள்ளது.

இவ்விருது குறித்து சென்னியாண்டவர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தைச் சேர்ந்த செல்வராஜ் கூறுகையில், “ஈஷாவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். எங்கள் நிறுவனத்தில் 750 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.

சுமார் 240 விவசாயிகளிடமிருந்து தேங்காய்களைக் கொள்முதல் செய்து, மற்ற கொள்முதலாளர்களைவிட ஒரு தேங்காய்க்கு அல்லது ஒரு கிலோவுக்கு ரூ.3 முதல் ரூ.4 வரை கூடுதல் விலை வழங்குகிறோம். இதன் மூலம் சிறு, குறு விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க உதவுகிறோம்.

ஈஷாவின் உதவியோடு பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் விற்பனை செய்வதற்கான சந்தை இணைப்புகளை ஏற்படுத்தி விற்பனையை மேலும் அதிகரிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

இந்த விருதுகளுக்காக இந்தியா முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன. இவற்றில், மூன்று கட்டங்களாக நடைபெற்ற மிகக் கடுமையான மதிப்பீடுகளுக்கு பின்னர் இந்த 3 நிறுவனங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

ஈஷா அவுட்ரீச் அமைப்பு உதவியுடன் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் மொத்தம் 25 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்களில் 17,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் 60 சதவீதம் பேர் சிறு, குறு விவசாயிகளாகவும், 15 சதவீதம் பேர் பெண் விவசாயிகளாகவும் உள்ளனர். இந்த நிறுவனங்கள் வாயிலாக விவசாயிகள் இதுவரை ரூ.400 கோடிக்கும் மேல் ஒட்டுமொத்த வணிகத்தை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், ஈஷாவின் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளின் பயன்பாட்டிற்காக, கோவையில் இலவச அதிநவீன மண் பரிசோதனை ஆய்வகம் செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் அதிக அளவில் உரங்கள் பயன்படுத்துவதைக் குறைத்து, மண்ணுக்குத் தேவையான உரங்களை மட்டும் சரியாகத் தேர்வு செய்து பயன்படுத்துவதை ஊக்குவிப்பது இந்த ஆய்வகத்தின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் படிப்படியாக மண் வளத்தை மேம்படுத்தி, விவசாயிகளை இயற்கை விவசாயத்தை நோக்கி நகர்த்துவதற்கும் இந்த ஆய்வகம் உதவி வருகிறது.

விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துதல், சந்தை வாய்ப்புகளை மேம்படுத்துதல், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிலையான விவசாய முறைகளை ஊக்குவித்தல் எனப் பல்வேறு தளங்களில் ஈஷா அவுட்ரீச் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வழிகாட்டி வருவது குறிப்பிடத்தக்கது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT