

திருவாரூர்: பாஜக முன்னாள் பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறையைக் கண்டித்து முத்துப்பேட்டையில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜகவினர், வீ த லீடர்ஸ் அமைப்பினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.
பாஜகவில் மாநில பொதுச் செயலாளாராக, முத்துப்பேட்டையைச் சேர்ந்த கருப்பு முருகானந்தம் பதவி வகித்து வந்தார். அவர் மீது பாஜக நிர்வாகியாக இருந்த திவ்யா சேஷாத்திரி என்பவர் தெரிவித்த குற்றச்சாட்டின் அடிப்படையில், கட்சி பதவியில் இருந்து கருப்பு முருகானந்தம் விடுவிக்கப்பட்டார்.
தொடர்ந்து, ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் திவ்யா சேஷாத்திரி அளித்த பாலியல் புகாரின்பேரில், கருப்பு முருகானந்தம் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்.
இந்நிலையில், கருப்பு முருகானந்தம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவரது குடும்பப் பெண்களிடம் போலீஸார் அத்துமீறுவதாகக் கூறி, அதைக் கண்டித்தும் அவரது ஆதரவாளர்கள் முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் அருகில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குமரவேல் தலைமை வகித்தார்.
அகில இந்திய முக்குலத்தோர் பாசறை நிறுவனர் சிற்றரசு, வழக்கறிஞர் நேதாஜி, பாஜக மேலிட பார்வையாளர் பேட்டை சிவா, புரட்சி சிங்கங்கள் அமைப்பின் பொதுச் செயலாளர் சிரஞ்சீவி, பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் கோட்டூர் ராகவன் உட்பட பாஜகவினர் மற்றும் வீ த லீடர்ஸ் அமைப்பு நிர்வாகிகள், பெண்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதையொட்டி, ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.