வணிகம்

‘இங்கிலாந்து உடனான தடையற்ற வர்த்தகத்தால் இந்திய ஏற்றுமதி இரு மடங்காக உயரும்’

கோவை வெளிநாட்டு வர்த்தக கூடுதல் தலைமை இயக்குநர் தகவல்

க.ராதாகிருஷ்ணன்

கரூர்: இந்தியா - இங்கிலாந்து இடையேயான சுதந்திர வர்த்தகம் மூலம் இங்கிலாந்துக்கான ஏற்றுமதி இரு மடங்காக உயரும் என கோவை வெளிநாட்டு வர்த்தக கூடுதல் தலைமை இயக்குநர் ஸ்ரீதர் கூறியுள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இன்று (ஜூலை 15ம் தேதி) முதல் அமலுக்கு வந்ததை அடுத்து கரூரில் இருந்து இங்கிலாந்துக்கு ரூ.2 கோடி மதிப்பிலான முதல் ஏற்றுமதி பொருட்களை கொடியசைத்து அனுப்பும் நிகழ்ச்சி இன்றுகாலை 10 மணிக்கு நடைபெற்றது. கரூர் அண்ணா சாலையில் நடைபெற்ற இந்நிகழ்வை கரூர் ஆட்சியர் சி.முத்துக்குமரன், கோவை வெளிநாட்டு வர்த்தக கூடுதல் தலைமை இயக்குநர் டி.ஸ்ரீதர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில், கரூர் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர் சங்க கவுரவ தலைவர் நாச்சிமுத்து, தலைவர் ப.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கோவை வெளிநாட்டு வர்த்தக கூடுதல் தலைமை இயக்குநர் டி.ஸ்ரீதர் செய்தியாளர்களிடம் கூறியது: ”இந்தியா- இங்கிலாந்து சுதந்திர வர்த்தகம் இன்று முதல் அமலுக்கு வருவதை அடுத்து கரூரில் இருந்து இங்கிலாந்துக்கு ரூ.2 கோடி மதிப்பிலான வீட்டு உபயோக ஜவுளிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்திய ஜவுளிகளுக்கு முன்னுரிமை கிடைக்கும்.

கரூரில் இருந்து ஆண்டுக்கு ரூ.800 கோடி அளவில் வீட்டு உபயோக ஜவுளிகள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில் சுதந்திர வர்த்தகம் (இறக்குமதி வரியின்மை) காரணமாக நிகழாண்டில் வர்த்தகம் இரு மடங்கமாக ரூ.1,600 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கரூரில் இருந்து ஆண்டுக்கு ரூ.800 கோடி அளவில் வீட்டு உபயோக ஜவுளிகள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில் சுதந்திர வர்த்தகம் (இறக்குமதி வரியின்மை) காரணமாக நிகழாண்டில் வர்த்தகம் இரு மடங்கமாக ரூ.1,600 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நமது போட்டியாளர்களான சீனா, பாகிஸ்தான், வங்க தேசத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஜவுளிகளுக்கு வரி விதிப்பு உள்ள நிலையில் இந்திய ஜவுளி இறக்குமதிக்கு வரி இல்லாததால் நமக்கு முன்னுரிமை கிடைக்கும்.

இதன்மூலம் இந்தியா- இங்கிலாந்து இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளிகள் 100 சதவீதம் தரமானவை. தரமற்ற ஜவுளிகள் ஏற்றுமதி செய்யப்படுவது இல்லை. இங்கிலாந்து மக்கள் அவற்றை இறக்குமதி செய்வதும் இல்லை.

கரூர் ஆட்சியர் சி.முத்துக்குமரன் கூறியதாவது: ”இந்தியா - இங்கிலாந்து சுதந்திர வர்த்தகம் மூலம் கரூரின் ஏற்றுமதி அதிகரிக்கும். விடுதி இல்லாத நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு விடுதி வசதி ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்கப்படும். திறன் மேம்பாட்டு மையங்கள் மூலம் தொழிலாளர்கள் திறனை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன” என்றார்.

கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ப.கோபாலகிருஷ்ணன் கூறுகையில், ”இங்கிலாந்தில் இந்திய ஜவுளிகள் இறக்குமதிக்கு 8 முதல் 12 சதவீத வரி விதிக்கப்பட்டு வந்தது. இங்கிலாந்துக்கு ஆண்டுக்கு ரூ.800 கோடி வரை ஜவுளிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

சுதந்திர வர்த்தகத்தின் மூலம் ஏற்றுமதி அதிகரிக்கும். ரூ.2 கோடியிலான சரக்கு இங்கிலாந்துக்கு தூத்துக்குடி துறைமுகம் மூலம் அனுப்பப்படுகிறது. இன்னும் 15 நாட்களில் ரூ.20 கோடி மதிப்பிலான ஜவுளிகள் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட உள்ளது,” என்றார்.

SCROLL FOR NEXT