எரிபொருளுக்கு தட்டுப்பாடு இருப்பதாக வதந்தி பரவியதால், மகாராஷ்டிர மாநிலம் தானேயில் உள்ள பங்க்கில் நேற்று பெட்ரோல், டீசல் நிரப்ப குவிந்த மக்கள்.படம்: பிடிஐ
புதுடெல்லி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுக்கும் விதமாக அவற்றின் மீதான கலால் வரி குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.13-ல் இருந்து, ரூ.3 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ரூ.10 ஆக இருந்த டீசல் மீதான கலால் வரி முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் - ஈரான் இடையிலான போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால், இந்தியாவில் எரிபொருள் விலை உயரும் அபாயமும் எழுந்தது. இந்நிலையில், விலை உயர்வை தடுக்கும் விதமாக, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. அதன்படி, பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.13-ல் இருந்து, ரூ.3 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
ரூ.10 ஆக இருந்த டீசல் மீதான கலால் வரி முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கூட்டம் முடிந்த பின்னர், கலால் வரி குறைப்பு தொடர்பான அறிவிப்பை மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
‘மக்கள் பாதிக்கப்படக் கூடாது’ - தற்போதுள்ள நிலைமையை ஆய்வு செய்த பிரதமர் மோடி, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் எந்த ஒரு உயர்வும் சாமானிய மக்களை பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: நாடு முழுவதும் எரிபொருள் எளிதில் கிடைக்கக் கூடியதாகவும், விலை கட்டுபடியாகக் கூடியதாகவும் இருப்பதை உறுதி செய்வதே இந்த முடிவின் நோக்கம். நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படவில்லை. மத்திய அரசு பொது முடக்கத்தை அமல்படுத்தும் என்ற வதந்தியிலும் உண்மை இல்லை. எரிபொருள் விநியோகத்தில் எந்த இடையூறும் ஏற்படாது. இதுதொடர்பாக வரும் செய்திகள் ஆதாரமற்றவை. மக்கள் அச்சப்பட வேண்டாம்.
பெட்ரோல், டீசல், விமான எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படாத வகையில், கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்வதை உறுதி செய்ய எண்ணெய் வர்த்தக நிறுவனங்களுக்கு அரசு ஆதரவு அளித்து வருகிறது. உலகளாவிய நிலையற்ற தன்மை இருந்த போதிலும், சில்லறை விலைகளில் எந்த உயர்வும் ஏற்படாமல் தடுப்பதே இதன் நோக்கம்.
உள்நாட்டில் கிடைக்க முன்னுரிமை: உள்நாட்டில் கிடைப்பதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், விமான எரிபொருள் உள்ளிட்ட சில பெட்ரோலிய பொருட்களின் ஏற்றுமதி மீதான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கூறும்போது, ‘‘கலால் வரிகுறைப்பு என்பது பெட்ரோல், டீசல் மீது லிட்டருக்கு ரூ.10 நேரடி நிவாரணமாக அமைகிறது. ஏற்றுமதி வரி மாற்றங்கள் உள்நாட்டு விநியோகத்தை நிலைப்படுத்தவும், பொருளாதார வேகத்தைப் பாதுகாக்கவும் உதவும்’’ என்றார். ‘‘பெட்ரோல், டீசல் மீதான கலால் வரிகுறைப்பு சரியான முடிவு’’ என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
ஏற்கெனவே இந்தியாவில் நயாரா எனர்ஜி நிறுவனத்தின் பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வரி குறைப்பு, எரிபொருள் விலையை குறைக்குமா என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து பொருளாதார நிபுணர்கள் கூறியபோது, ‘‘கலால் வரி குறைப்பால் பெட்ரோல், டீசல் விலை குறையாது. ஆனால், விலை உயராமல் பார்த்துக்கொள்ள முடியும்’’ என்று தெரிவித்தனர்.
ஏற்றுமதிக்கு கூடுதல் வரி: இதற்கிடையே, விமான பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய மறைமுக வரிகள் வாரியம் (சிபிஐசி) நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘விமான பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு லிட்டர் விமான பெட்ரோலுக்கு ரூ.29.50, ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.21.50 கூடுதல் வரி விதிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘‘இந்த நடவடிக்கையால் விமான பெட்ரோல், டீசல் ஏற்றுமதி குறையும். உள்நாட்டு தேவை பூர்த்தி செய்யப்படும்’’ என்று சிபிஐசி தலைவர் விவேக் சதுர்வேதி தெரிவித்தார்.
விமான பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளதால், அடுத்த 2 வாரங்களில் ரூ.1,500 கோடி வருவாய் கிடைக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.